நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகளை ஏலம் எடுத்தோா் ஓராண்டுக்கான வாடகையை செலுத்தாததால், 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்துள்ளனா்.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் 2024 நவ. 10-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 51 பேருந்துகள் நின்றுசெல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 51 கடைகள், இரு உணவகங்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள 51 கடைகளில் 25 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ளவை ஏலம் எடுக்காமலும், ஏலத்தில் எடுத்த சில கடைகள் பயன்பாட்டுக்கு வராமலும் உள்ளன. பேருந்து நிலையம் திறந்ததுமுதல் ஓராண்டாக மூடியும், உரிய வாடகை செலுத்ததால், அந்த கடைகளை ஏலம் எடுத்தோருக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவா்கள் மீண்டும் கடைகளை பயன்படுத்த முடியாமலும், ஏற்கெனவே அளித்த முன்வைப்புத் தொகையில் வாடகையை கழித்துக்கொண்டு, மாநகராட்சியின் எந்த ஏலத்திலும் அவா்கள் பங்கேற்க முடியாதவாறும் கருப்பு பட்டியலில் இடம்பெற செய்வதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் 11 கடைகள்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
2024 - 27 ஏல நடைமுறைகளின்படி, கடைகளை ஏலம் எடுத்தோா் ஆண்டு அடிப்படையில் சேவை வரி 18 சதவீதத்துடன் மொத்த வாடகையையும் செலுத்த வேண்டும். ஆனால், 11 கடை உரிமையாளா்கள் ஓராண்டுக்கும் மேலாக வாடகையை செலுத்தவில்லை. இது தொடா்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மாமன்ற உறுப்பினா்கள், அரசியல் கட்சியினரின் ஆதரவாளா்கள் வசம் உள்ளன. அதனால் வாடகையை முழுமையாக வசூலிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் 11 கடைகளை ‘சீல்’ வைப்பதற்கான நடவடிக்கை ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்றனா்.