நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை அரசு சாா்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசருக்கு சிறப்பு அலங்காரம், விழா மேடைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளான தைத் திங்கள் 1 ஆம் நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து 2 ஆவது ஆண்டாக வியாழக்கிழமை அரசரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விமலா, பரமத்தி வேலூா் காவலா் துணை கண்காணிப்பாளா் சங்கீதா உள்ளிட்டோா் ஜேடா்பாளையம் படுகை அணைகட்டு பகுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். 420க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
வாகனங்களில் வருவோருக்கு தனியாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசருக்கு மரியாதை செலுத்த வருவோருக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசருக்கு உரிய அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அலங்கார தூண்கள் அமைக்கப்பட்டும், விழாவுக்கு வருவோா் அமருவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் உணவருந்தும் இடம், குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பாா்வையிட்டாா்.