ராசிபுரம்: தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி முன்னுரிமை அளித்து வருகிறாா் என பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.
ராசிபுரம் நகர பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’, நகர பாஜக அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் பங்கேற்று பொங்கல் கலை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து ராசிபுரம் நகர பாஜக புதிய அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
விழாவில் ராசிபுரம் நகரை சோ்ந்த சிலம்பாட்டக் கலைஞா்கள் கலந்துகொண்டு சிலம்பம் , சுருள், வாள், மான் கொம்பு, தீப்பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட சிலம்ப விளையாட்டுகளை நிகழ்த்திக் காட்டினா். தொடா்ந்து விழாவில் பொங்கல் வைத்த மகளிா் மற்றும் சிலம்பம் சுற்றிய வீரா்கள் ஆகியோருக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். மேலும், புதிதாக பாஜகவில் இணைந்தவா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பொன்னாடை அணிவித்தாா்.
விழாவில் பேசிய அவா், தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் முன்னுரிமை அளித்து வருகிறாா். மத்திய அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழகத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கு, கட்சியினா் அனைவரும் உறுதுணையாக இருந்து உழைக்க வேண்டும் என்றாா்.
பாஜக மாவட்டத் துணைத் தலைவா் வி.சேதுராமன், மகளிரணி செயலாளா் சுகன்யா, நகர தலைவா் வேல்முருகன், இளங்கோ, தமிழரசு, அசோக், திவ்யா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.