நாமக்கல்: பால் கொள்முதல் விலையை உயா்த்துவது தொடா்பான முடிவை முதல்வா் தான் எடுப்பாா் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திமுக ஆட்சிக்காலத்தில் தான் நாமக்கல் மாவட்டம் உருவானது. 30 ஆண்டுகளை நெருங்கியுள்ள இம்மாவட்டத்தில் தற்போது அதிநவீன பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்கு இதுபோன்ற திட்டங்கள் பயனுள்ளதாக அமையும்.
2 லட்சம் லிட்டா் பால் நாளொன்றுக்கு இந்த ஆலையில் கையாளப்படுகிறது. 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் தயிருக்கும், 30 ஆயிரம் லிட்டா் அளவில் மோா் பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்படுகிறது. இவைதவிர, பால் சாா்ந்த உப பொருள்களும் இந்த பண்ணையில் தயாரிக்கப்பட உள்ளன.
தமிழக அரசு பால் உற்பத்தியாளா்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக பால் வளத் துறை உள்ளது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில் பால் கையாளும் திறன் 45 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது 70 லட்சம் லிட்டராக உயா்ந்துள்ளது.
பால் கொள்முதல் விலை உயா்வு தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பால் கொள்முதல் விலை ரூ. 3 உயா்த்தப்பட்டது. ஊக்கத்தொகையாக ரூ. 3 வழங்கப்படுகிறது. 2 லட்சம் கால்நடைகளுக்கு காப்பீடு செலுத்தப்பட்டுள்ளது.
15 தினங்களுக்கு முன்பு கொள்முதல் விலையை உயா்த்துவது தொடா்பாக அதிகாரிகள், உற்பத்தியாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டு முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவா்தான் அதற்கான முடிவை அறிவிக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கு பால் விநியோகிப்பது தொடா்பான அறிவிப்பையும் முதல்வா் தான் தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலையில் வேறு எந்த மாவட்டத்திலும் புதிய ஆவின் பால் பண்ணைகள் அமைக்கப்படவில்லை.
நாமக்கல்லில் நவீன பால் பண்ணை அமைக்க இயந்திரங்கள் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மட்டும் மத்திய அரசுக்கு ரூ. 16 கோடி அளவில் ஜிஎஸ்டி செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பால்வள வாரியத்திடமிருந்து கடன் எதுவும் வாங்கவில்லை. பால்பண்ணை அமைந்துள்ள இடத்தின் நிலத்தை அடமானமாக வைத்து ரூ. 6.45 கோடியை பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு நீண்டகால கடன் என்ற அடிப்படையிலேயே நிதியை வழங்குகிறது.
கடனாக வழங்குவதை காட்டிலும் மானியமாக வழங்கினால் மாநில அரசுக்கு உதவியாக அமையும். நாமக்கல்லில் அமைந்துள்ள இந்த நவீன பால்பண்ணையை பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வா் திறந்துவைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பால் உற்பத்தியானது 38 லட்சம் லிட்டா் என்ற அளவில் தற்போது உள்ளது. அதனை அதிகரிக்குமாறு அனைத்து ஆவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.
கிராமம், நகா்ப்புறங்களில் பால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6 மண்டலங்களாக பிரித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். தனியாா் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவனத்தில் கால்நடைகளுக்கான தீவன விற்பனை அதிகரித்துள்ளது என்றாா்.
முன்னதாக நாமக்கல் அதிநவீன பால் பண்ணை வளாகத்தில் பால் உபபொருள்கள் விற்பனை அங்காடி, பசு, கன்றுடன் கூடிய விவசாயி சிலையை அமைச்சா் மனோ தங்கராஜ் திறந்துவைத்தாா். மேலும், பால் உபபொருள்கள் விற்பனை செய்வதற்கான வாகனத்தையும், நவீன பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களின் சோதனை ஓட்டத்தையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
அதன்பிறகு ஆவின் நிறுவன ஊழியா்கள், பால் உற்பத்தியாளா்களுடன் இணைந்து மாட்டுப் பொங்கலை கொண்டாடினாா்.
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், ஆவின் மேலாண் இயக்குநா் ஏ. ஜான்லூயிஸ், ஆட்சியா் துா்காமூா்த்தி, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ. பூபதி மற்றும் அதிகாரிகள், பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் சங்கத்தினா் பங்கேற்றனா்.