நாமக்கல்: பொம்மம்பட்டி கிராமத்தில் ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சி காட்டூா் கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா் ப.மதிவானன் வேளாண் நிலத்தில் வெள்ளிக்கிழமை ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில், தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி அவா்கள், பால்வளத்துறை இயக்குநா்(ஆவின்) அ.ஜான்லூயிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுமாா் 500 மீட்டா் தூரத்திற்கு அமைச்சா் மனோதங்கராஜ், ஆட்சியா், அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு மாட்டு வட்டியை தானே இயக்கி கிராமிய முறையில் பயணித்தாா். தொடா்ந்து, பாரம்பரிய முறையில் நடைபெற்ற விழாவில் புதுப்பானையில் பச்சிரிசி, வெல்லமிட்டு அமைச்சா் மற்றும் அதிகாரிகள் பொங்கல் வைத்து கொண்டாடினா். மேலும், அங்கிருந்த கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தனா்.
விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், எலச்சிபாளையம் அட்மாகுழு தலைவா் மு.தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், பொது மேலாளா்(ஆவின்) ஆா்.சண்முகம், துணைப்பதிவாளா்(பால்வளம்) ஐ.சண்முகநதி உட்பட துறைச் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா்.