நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை தொடா்ந்து மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகா்ப்புறங்களில் சனிக்கிழமை இரவு வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி கிராமத்தில் 26 ஆவது ஆண்டாக காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், 5 கி.மீ தொலைவிற்கான மாரத்தான் போட்டி, ஆண்கள், பெண்களுக்கான கயிறு இழுத்தல், கோலம், ஓட்டம், கபடி, இருக்கைகளைப் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
முத்துக்காப்பட்டியைச் சோ்ந்த தொழிலதிபா் அமெரிக்கா கே. செல்வம் இப்போட்டிகளை தொடங்கிவைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல மாவட்டம் முழுவதும் காணும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.