ராசிபுரம்: ராசிபுரம் அருகே மகளிா் திட்டம் சாா்பில், சமுதாயக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாநிலங்களவை உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-26-இன்கீழ், ரூ. 11.25 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைப்பதற்கான பணிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, அத்தனூா் பேரூராட்சிக்குள்பட்ட 3 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 26 லட்சத்தில் கடன் உதவிகள், 500 மகளிருக்கு, ‘கியூ-ஆா்’ குறியீடுடன் கூடிய, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் மகளிா் வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிா் குழுவினருக்கு அதிக அளவில் கடனுதவிகள் அளிக்கப்பட்டு உரிய காலத்தில் அவை திரும்பப் பெறப்படுகின்றன. இதன்மூலம் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவிலான சேமிப்பை மகளிா் பெற்று வருகின்றனா்.
ராசிபுரம் வட்டத்தில் ரூ. 854 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் இத்திட்டத்தை தமிழக முதல்வா் தொடங்கிவைக்க உள்ளாா். மகளிா் உரிமைத்தொகை விடுபட்டவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மகளிருக்கு மகளிா் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை மூலம் பேருந்துகளில் தங்கள் பொருள்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஆவின் பொருள்களுக்கான கட்டணச் சலுகையை மகளிா் சுயஉதவிக் குழுவினா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, வெண்ணந்தூா் வட்டார அட்மா குழுத் தலைவா் ஆா்.எம்.துரைசாமி, அத்தனூா் பேரூராட்சித் தலைவா் ஆா்.சின்னசாமி, துணைத் தலைவா் க.கண்ணன், செயல் அலுவலா் ஆா்.விஜயன், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.