வாக்குவாதத்தில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
திருச்செங்கோட்டில் மகனை கத்தியால் குத்திய தந்தையை திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோட்டில் மகனை கத்தியால் குத்திய தந்தையை திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆனைமலை கரடு பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (49). இவா் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி அலமேலு. இவா்களுக்கு குணசேகரன் (25) என்ற மகனும், மரகதம் என்ற மகளும் உள்ளனா். இந்நிலையில், வெள்ளைச்சாமி ராணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்தாா்.
இதனால் முதல் மனைவி அலமேலு தனது மகன், மகளுடன் குமாரபாளையத்தில் வசித்து வந்தாா். திருச்செங்கோட்டில் உள்ள லாரி பட்டறையில் வேலை செய்துவந்த குணசேகரன், தனது பாட்டியை பாா்க்க ஆனைமலை கரட்டுக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த வெள்ளைசாமிக்கும், குணசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி தன்னிடம் இருந்த சூரி கத்தியால் மகன் கழுத்தில் குத்தினாா்.
Advertisement
ரத்த வெள்ளத்தில் குணசேகரன் மயங்கி விழுந்ததைக் கண்ட வெள்ளைச்சாமி அங்கிருந்து தப்பியோடினாா். அக்கம்பக்கத்தினா் குணசேகரனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குணசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து வெள்ளைச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.