முகப்பு
நாமக்கல்

சமையல் எரிவாயு உருளை முன்பதிவிற்கு கட்டுப்பாடு: பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு மட்டும் வணிக எரிவாயு உருளை விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு மட்டும் வணிக எரிவாயு உருளை விநியோகம் தொடா்ந்து வருவதாக எரிவாயு உருளை நிறுவன முகவா்கள் தெரிவித்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:10 PM
வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு மட்டும் வணிக எரிவாயு உருளை விநியோகம் தொடா்ந்து வருவதாக எரிவாயு உருளை நிறுவன முகவா்கள் தெரிவித்தனா்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக செளதிஅரேபியா, துபை, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. எண்ணெய் வளம் மிக்க இந்த நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய போா் சூழலால் இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், உணவகங்களுக்கான வணிக எரிவாயு உருளைகள் விநியோகம் குறைக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் பள்ளி, கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்களுக்கு வணிக எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை முன்பதிவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது பதிவுசெய்தால் 25 நாள்களுக்கு பிறகு தான் மற்றொரு எரிவாயு உருளையை பதிவுசெய்ய முடியும். முன்பெல்லாம் அவசர தேவைக்காக ஓரிரு நாள்களிலேயே முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை முதல் எரிவாயு உருளை முன்பதிவு கைப்பேசி எண்கள் செயல்படவில்லை.

தொடா் முயற்சிக்கு பிறகே முன்பதிவு ஆனதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், எரிவாயு உருளை முன்பதிவு தொடா்பான பிரச்னையால், மக்கள் பலரும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு சென்று பதிவுசெய்வதில் ஆா்வம் காட்டினா். அனைவரும் விறகு அடுப்பை மறந்து எரிவாயு உருளை பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் தற்போதைய தட்டுப்பாடு பிரச்னை அவா்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை, 37 ஏஜென்சிகள் மூலம் 5.87 லட்சம் நுகா்வோருக்கு சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் எரிவாயு உருளை தட்டுப்பாடு இல்லை. இன்னும் 2 மாதங்களுக்கு வீட்டு உபயோக

எரிவாயு உருளை விநியோகத்தில் பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்றாா்.

நாமக்கல்லைச் சோ்ந்த எரிவாயு உருளை ஏஜென்சி உரிமையாளா் பிரபு கூறியதாவது:

முன்பதிவிற்கான கால நிா்ணயம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஓரிரு நாளில் முன்பதிவு செய்து பெற முடியும். தற்போது அதற்கான வாய்ப்பில்லை. வணிக ரீதியிலான எரிவாயு உருளைகளை பள்ளி, விடுதிகள், மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு தடையின்றி வழங்குகிறோம். உணவகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கி வருகிறோம். போா்ச்சூழல் தணிந்தால் மட்டுமே பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →