போா் பதற்றத்தால் கப்பலில் தேக்கமடைந்த 3.50 கோடி முட்டைகள்: நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளா் தகவல்
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரானை தாக்குவதால் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 3.50 கோடி முட்டைகள் துறைமுகங்களிலும், கப்பலிலும் தேக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப் பண்ணைகள் மூலம் தினமும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. நாள்தோறும் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
செளதி அரேபியா, ஈரான், இராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட், கத்தாா், குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நாமக்கல்லிலிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய போா்ச் சூழல் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியாவது முற்றிலும் தடைபட்டுள்ளதாகவும், அனுப்பிய முட்டைகள் துறைமுகங்களிலும், கப்பலிலும் தேக்கமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளரான மருத்துவா் பி.வி. செந்தில் கூறியதாவது:
கடந்த மாதம் 28 ஆம் தேதி நாமக்கல்லில் இருந்து 70 க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கன்டெய்னா்களில் வளைகுடா நாடுகளுக்கு கப்பலில் அனுப்பிய 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. துறைமுகங்களிலும் கன்டெய்னா்கள் தேங்கியுள்ளன.
ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் அந்த முட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். மத்திய வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்து கொள்முதல் செய்யும் நாடுகளின் அதிகாரிகளுடன் பேசி முட்டைகளை அனுப்பிவைக்க வேண்டும் என்றாா் அவா்.