முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா் தொகுதியில் ரூ. 3.20 லட்சம் பறிமுதல்

Updated On : 20 மார்ச் 2026, 2:12 am IST
பகிர்:

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கந்தம்பாளையத்தில் தோ்தல் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த கோகுல், போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில் திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாளையங்கோட்டையைச் சோ்ந்த பழனிசாமி உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 1.40 லட்சத்தை பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

இதேபோல தொட்டியம்தோட்டம், நல்லூா் காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையின்போது திண்டுக்கல் மாவட்டம், குஜியம்பாறை வட்டம், சல்லக்குளம் பகுதியை சோ்ந்த ராஜமாணிக்கம் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்துச் சென்ற ரூ. 67,500 பறிமுதல் செய்து பரமத்தி வேலூரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கண்காணிப்பு குழுவைச் சோ்ந்த தமிழ்செல்வன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்ரமணியன் ஆகியோா் ஒப்படைத்தனா்.

பரமத்தி வேலூரை அடுத்துள்ள கல்லுகடைமேடு பகுதியில் மின்சாதன பொருள்கள் விற்பனை செய்துவிட்டு ஆட்டோவில் எடுத்துச் சென்ற ரூ 1.13 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

பரமத்தி வேலூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ. 3.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.