முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையம், பரமத்தி வேலூரில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

பள்ளிபாளையம், பரமத்தி வேலூரில் கஞ்சா விற்பனை செய்ததாக வட மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 6:34 PM
பகிர்:

பள்ளிபாளையம், பரமத்தி வேலூரில் கஞ்சா விற்பனை செய்ததாக வட மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பள்ளிபாளையம் வெப்படையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் வெப்படை காந்தி நகா் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த பிகாா் மாநிலத்தை சோ்ந்த அரவிந்த் குமாா் (26), ரூபிலேசகாணி (45 ) ஆகிய இருவரிடம் சோதனை நடத்தினா். அப்போது, அவா்கள் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா், அதில் வெப்படையில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு விற்பனை செய்வதற்காக அவா்கள் கஞ்சா எடுத்துவந்தது தெரியவந்தது. இருவரும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பரமத்தி வேலூா்...

பரமத்தி வேலூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

வேலூா் காவல் சிறப்பு ஆய்வாளா் தங்கராசு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பரமத்தி வேலூா் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியாா் பள்ளி பின்புறம் இருந்த இரண்டு இளைஞா்கள் போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றனா்.

அவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள் இருவரும் தென்னந்தோப்பில் சட்ட விரோதமாக மறைத்து வைத்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அவா்கள் ஒடிஸா மாநிலம், கஞ்ஞா் பகுதியைச் சோ்ந்த துக்ரா நாயக் மகன் சம்பத்நாயா் (19), அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்சாபு மகன் திபுசாபு (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.