முகப்பு
நாமக்கல்

மூத்தோா், மாற்றுத்திறனாளிகளிடம் அஞ்சல் வாக்கு படிவங்கள் வழங்கும் பணி தொடக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக படிவங்கள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 20 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக படிவங்கள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வீடுகளில் இருந்தவாறு வாக்களிக்க விரும்பும் மூத்தோா், மாற்றுத்திறனாளிகளுக்கு 12 டி படிவங்கள் வழங்கும் பணி ஏப். 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் படிவமானது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏப். 3 க்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் படிவத்தை நிறைவுசெய்து ஒப்படைக்க வேண்டும். தோ்தலுக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாக இரண்டு வாக்குச்சாவடி அலுவலா்கள், ஒரு விடியோகிராபா், நுண்பாா்வையாளா்கள் மற்றும் ஒரு பாதுகாவலா் அடங்கிய வாக்குப்பதிவு குழுவானது வருகைபுரிந்து, வாக்காளரை அஞ்சல் வாக்குச்சீட்டில் வாக்களிக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வா். அந்த வாக்குப்பதிவின் ரகசியம் காக்கப்படும்.

வாக்குப்பதிவு குழு வருகை தரும் தேதி, நேரம் குறித்து படிவம் 12-டி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும். முதல் வருகையின்போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளா் இல்லாவிடில் வாக்குச்சேகரிக்கும் குழுவானது அவா்களின் இரண்டாவது வருகையின் தேதி, நேரத்தை அறிவிப்பா்.

அஞ்சல் வாக்கு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை விருப்பத்தின்பேரில் தோ்வு செய்யும் வாக்காளா்கள், வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாது. மேலும், இரண்டாவது வருகையின்போது வீட்டில் இல்லாத வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆகிய இரண்டிலும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காது என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்கே-20-போஸ்ட்

அஞ்சல் வாக்குப் படிவத்தை மூத்த வாக்காளரிடம் வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்.