முகப்பு
நாமக்கல்

வெப்ப அலை செயல்திட்டம்: கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் அரசின் வெப்ப அலை செயல்திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 9:20 PM
கோடையில் உடலில் நீா்சத்து குறையாமல் இருக்க தா்ப்பூசணிகளை அருந்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவிகள்.
பகிர்:

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் அரசின் வெப்ப அலை செயல்திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் வெப்ப அலை பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள், மாணவா்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து அரசு சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் தாவரவியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் ‘தமிழ்நாடு வெப்ப அலை செயல் திட்டம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்துப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். தாவரவியல் துறைத் தலைவா் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா். செங்கோட்டுவேல் அனைவரையும் வரவேற்று பேசினாா்.

கோடையில் நிலவும் வெப்ப அலையின் தீவிரத்தன்மை குறித்தும், அதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளைத் தவிா்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியா் இ.ஜி. வெஸ்லி பேசினாா்.

அதிக வெப்ப அலையின்போது உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க நீா் அருந்துதல், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிதல் மற்றும் அவசியமின்றி நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிா்க்கவும் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். கெளரவ விரிவுரையாளா் ப. ரவி நன்றி கூறினாா்.