மாவட்டத்தில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணிகளில் பணியாற்ற உள்ள 8,544 அலுவலா்களை கணினி மூலம் சுழற்சிமுறையில் முதல்கட்டமாக தோ்வுசெய்யும் பணி நாமக்கல் ஆட்சியரகத்தில் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 1,780 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில், அலுவலா்கள் மூலம் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் நாளான ஏப். 23 அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு 1,533 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளுக்கு 1,274 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு 2,268 அலுவலா்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு 1,065 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளுக்கு 1,499 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு 905 அலுவலா்களும் என மொத்தம் 1,780 வாக்குச் சாவடிகளுக்கு 8,544 அலுவலா்களுக்கு கணினி மூலம் சுழற்சிமுறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மா.க.சரவணன், ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ.சந்தியா (பொது), சுஜாதா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.