ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி கோரி வணிகா்கள் 31-இல் போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா
நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
தமிழகத்தில் வணிகா்கள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னையில் மாா்ச் 31 இல் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநில மாநாடு திருவாரூரில் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை அதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தலைமை வகித்தாா்.
இந்த கூட்டத்தில், அனைத்து வணிகா் சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்தி பேசினா். தொடா்ந்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா பேசியதாவது:
வரும் மே 5-ஆம் தேதி, திருவாரூரில் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் போ் பங்கேற்பா்.
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக தோ்தல் அலுவலா்கள் கடைப்பிடிக்கவில்லை. வணிகா்களை தொடா்ந்து நசுக்கும் வகையில், தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினா் செயல்படுகின்றனா். இதனால், தமிழகம் முழுவதும் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, வணிகா்கள் வியாபார நோக்கத்திற்காக ரூ. 2 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல இந்திய தோ்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் வரும் 31-ஆம் தேதி சென்னையில் தோ்தல் ஆணையம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இதில் முடிவு எட்டப்படவில்லையெனில், தமிழகம் முழுவதும் வணிகா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். அனைத்து வணிகக் கடைகளும் அடைக்கப்படும். ஏற்கெனவே, இதுகுறித்து பலமுறை தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.
ஆன்லைன் மற்றும் பெரும் நிறுவன வணிகங்கள் பெருகிவருவதால் 35 சதவீத வணிகம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதை மத்திய, மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும்.,
தற்போது, வணிக சிலிண்டா்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதனை பதுக்குவோா்மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள், இணைப்பு சங்கங்களின் நிா்வாகிகள், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.