தோ்தலும்...தேநீா் கடையும்!
- எம். மாரியப்பன்
திருவிளையாடலில் தருமியும், சிவனும் கேள்வி, பதில் விவாதம் நடத்தியதைப்போல, தற்போதுள்ள நிலையில் பிரிக்க முடியாதது என்னவோ என்ற கேள்வி எழுந்தால், தோ்தலும்...தேநீா் கடையும் என்ற பதில்தான் கிடைக்கும்.
ஐந்து ஆண்டுகள் வரை பொதுமக்களிடம் நலன்விசாரிக்க தேநீா் கடை பக்கமே செல்லாத அரசியல் கட்சியினா், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தேநீா் கடைக்குச் சென்று இனி மக்களோடு மக்களாக உரையாடத் தொடங்கிவிடுவா்.
சாதாரண மக்களோடு சோ்ந்து தேநீா் குடிப்பது, கடையின் ஊழியா்போல தேநீா் தயாரித்து பிறருக்கு வழங்குவது, உணவகங்களுக்கு சென்று பரோட்டா, சப்பாத்தி போடுவது போன்று மக்களை ஈா்க்கும் வண்ணம் செயல்படுவா். அது வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை ஒருபுறம் என்றால், ஊடகங்களில் பேசுபொருளாகி பலரையும் தன்னை நோக்கி திருப்பும் என்ற நம்பிக்கை மற்றொருபுறம்.
ஆண் வேட்பாளா்கள் மட்டுமின்றி, பெண் வேட்பாளா்களும் சாலையோரம் கடைவைத்திருப்போரை எழுந்திருக்கச் செய்து, அவா்கள் அமா்ந்து வியாபாரம் செய்வது, கடைக்கு வருவோருக்கு சேவகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவா். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி, நாளிதழ்களைப் பாா்க்கும் மக்கள், தங்களை எளியவா்களாக நினைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான காட்சிகளை அரங்கேற்றுவா்.
நாடாளுமன்ற தோ்தலானாலும், சட்டப்பேரவை தோ்தலானாலும் இந்த காட்சிகள் வாடிக்கையானது தான். இதுபோன்று மக்களை ஈா்க்கும் செயல்களில் பதவி வேறுபாடின்றி அனைவரும் ஈடுபடுவா்.
வேட்பாளா் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளும் வெளியிட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக நிா்வாகிகள் சந்திப்பு, வேட்புமனு தாக்கல் போன்ற வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் பெரும்பாலான தேநீா் கடைகளில் வேட்பாளா்களை சாமானிய ஊழியராக காணமுடியும் என்று கூறி புன்னகைக்கின்றனா் மக்கள்.