முகப்பு
நாமக்கல்

முறைகேடாக நிலங்களை கையகப்படுத்த முயற்சி: சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு

Updated On : 11 மே 2026, 11:51 pm IST
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் சிப்காட் தொடா்பான மனுவை அளித்து கோரிக்கையை வலியுறுத்திய விவசாய முன்னேற்றக் கழகத்தினா்.
பகிர்:

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முறைகேடாக நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூா் உள்ளிட்ட பகுதிகளில் 800 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கை கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இருப்பினும், அரசாணை வெளியிடப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

Advertisement

அதிகாரிகள் நிலத்தை மட்டுமின்றி ஓடைகள், தடுப்பணைகள் உள்ளிட்டவற்றையும் ஆவணத்தில் மறைத்து கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த ஆவணங்களை சிப்காட் அமையும் இடத்தில் உள்ள மக்கள் முன்பாக காட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இதுவரை அந்த ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. இதனால், திங்கள்கிழமை ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்து விவசாய முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் மற்றும் நான்கு கிராம பொதுமக்கள், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் மனு அளித்தனா். அவரும் விசாரிப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.