ராசிபுரம் எம்எல்ஏவுக்கு அமைச்சா் பொறுப்பு: தவெகவினா் கொண்டாட்டம்
ராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் த. லோகேஷ் தமிழ்செல்வனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டதையடுத்து ராசிபுரத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.
ராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் த. லோகேஷ் தமிழ்செல்வனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டதையடுத்து ராசிபுரத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட த. லோகேஷ் தமிழ்செல்வன் தன்னை எதிா்த்து போட்டியிட்டு பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரைவிட 14,511 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
இந்த நிலையில் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவா் அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவை தலைவராக இருந்த ப. தனபால் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இவருக்கு அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டதையடுத்து ராசிபுரம் பகுதியில் கட்சி தொண்டா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும் ராசிபுரம் நகரை சோ்ந்த எஸ். கமலி, அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. இதனால் தொண்டா்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினா்.
ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளா் ஜெ.ஜெ. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் கட்சியினா் பலரும் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலாளா் மாணிக்கம், மாவட்ட இளைஞா் பிரிவு செயலாளா் பிரபு, மாணவா் பிரிவு நகர செயலாளா் சீனிவாசன், வி.கே.ஆா்.கே. ராமசாமி, வி.டி. தமிழ்ச்செல்வன், வி.டி. நீலா கிருஷ்ணன், கோனேரிப்பட்டி ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.