சேலம்

தருமபுரி பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

சேலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்த தருமபுரி கலவரம்

க. தங்கராஜா

சேலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்த தருமபுரி கலவரம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணின் சடலத்தைப் பெற மறுத்து பல்வேறு தலித் அமைப்பினர் 2-வது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு நீதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நத்தம் காலனியைச் சேர்ந்த அன்பு - ருக்கு தம்பதியரின் மகள் மங்கம்மாள் (20) என்பவரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 போராட்டத்தின் 2-வது நாளான கடந்த வியாழக்கிழமை மயக்கமடைந்து தருமபுரி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் திங்கள்கிழமை (டிசம்பர் 3) மங்கம்மாள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

 மங்கம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காமல் சேலம் அரசு மருத்துவமனையில் பல்வேறு தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

 இந்த நிலையில் புதன்கிழமை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வரப்போவதாக தலித் அமைப்புகள் அடங்கிய போராட்டக் குழு அறிவித்தது. ஆனால் ஊர்வலத்துக்கோ, ஆர்ப்பாட்டத்துக்கோ அனுமதி அளிக்க முடியாது என்று மாநகர போலீஸார் தெரிவித்துவிட்டனர்.

 இதையடுத்து ஊர்வலம், போராட்டம் ஆகியவற்றை ரத்து செய்த போராட்டக் குழுவினர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் அருகில் திரண்டு பல மணி நேர ஆலோசனையில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் சிந்தனைச் செல்வன் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

 அதில், மங்கம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால் மற்றொரு தரப்பினர் சடலத்தை வைத்துக் கொண்டே கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என்று கூறினர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சில தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் போராட்டக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

 இருப்பினும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு வரும் வரையிலும் மங்கம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் நாயக்கன்கொட்டாயில் வியாழக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சேலத்தில் இருந்து தலித் அமைப்பினர் சென்று கலந்து கொள்வது என்றும் போராட்டக் குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர். இதனால் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்த மங்கம்மாளின் உடல் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையிலேயே 3-வது நாளாக வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT