சேலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி, விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் மாநகராட்சி போஸ் மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சியை மேயர் எஸ்.சௌண்டப்பன் தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக முதல்வரின் ஆணையின்படி உருவாக்கப்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவிகள் வழங்கி வருகிறது. அந்த நிதியை வங்கிகளின் வாயிலாக கடன்களாகவும், மானியங்களாகவும் பெற்று ஒவ்வொரு குழுவும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளும் பொருட்டு, இதுபோன்ற கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
சேலம் மாநகராட்சியில் மட்டும் சுமார் 3,200 குழுக்கள் பதிவு செய்யப்பட்டு செயல்படுகின்றன. நேரு கலையரங்கில் வரும் 10-ம் தேதி வரையிலும் 6 நாள்களுக்கு தினசரி காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடைபெறும் இந்த கண்காட்சியில் சுமார் 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை, கலை நிகழ்ச்சிகள், சுய உதவிக் குழுக்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி, கருத்தரங்கம், குழுக்களுக்கு இடையிலான கலந்துரையாடல் போன்றவை இங்கு நடைபெறுகின்றன என்றார் அவர்.
மாநகராட்சி ஆணையர் மா.அசோகன், துணை மேயர் மு.நடேசன், நகர் நல அலுவலர் டாக்டர் எஸ்.பொற்கொடி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.