முகப்பு
சேலம்

உடையாப்பட்டி பகுதியில் விபத்தில் மேலும் ஒருவர் சாவு:பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் உடையாப்பட்டி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் டேங்க் ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 7 மார்ச், 2013 at 1:18 PM
பகிர்:

சேலம் உடையாப்பட்டி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் டேங்க் ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார். தொடர் விபத்துகளைத் தடுக்கத் தவறியதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து சன்னியாசிகுண்டு வழியாகச் செல்லும் சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் உடையாப்பட்டி, சாஸ்திரி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

 இந்த பகுதியில் நான்கு வழிச் சாலையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால் சாலையில் செல்லும் உள்ளூர் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுவதாகவும், எனவே வேகத்தடை உள்ளிட்ட முன்னேற்பாடுகளைச் செய்து விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஏற்கெனவே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

 இந்த நிலையில் சாஸ்திரி நகரைச் சேர்ந்த குடிநீர் தொட்டி இயக்கும் பணியாளர் மருதையன் (55) என்பவர் புதன்கிழமை காலை, தண்ணீர் திறப்பதற்காக நான்கு வழிச் சாலையைக் கடந்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனம் அவர் மீது மோதிவிட்டுச் சென்றுவிட்டது. இதனால் தலையில் படுகாயம் அடைந்த மருதையனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

 ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த சாஸ்திரி நகர் சுற்றுப் பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் நான்கு வழி்ச் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். எருமாபாளையத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவர் இதேபோல் விபத்தில் சிக்கி உயிரிழந்து ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் ஒருவர் உயிரிழந்ததற்கு மாநகராட்சி, காவல்துறையின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

 இது குறித்த தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீஸார் சாஸ்திரி நகர் பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் மக்களை சமாதானம் செய்ததை அடுத்து சுமார் 2 மணி நேரம் தொடர்ந்த மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.