சேலம்

வட மாநிலங்களில் கோழிகள் இறப்பு எதிரொலி: தமிழகத்தில் முட்டை, கோழிக்கறி விலை உயர்வு

வடமாநிலங்களில் நிலவும் சீரற்ற தட்பவெப்ப நிலையால், கோழிகள் இறப்பு காரணமாக தமிழகத்தில் முட்டை, கோழிக்கறி விலை தொடர்ந்து

கே.விஜயபாஸ்கா்

வடமாநிலங்களில் நிலவும் சீரற்ற தட்பவெப்ப நிலையால், கோழிகள் இறப்பு காரணமாக தமிழகத்தில் முட்டை, கோழிக்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ் ஆண்டின் கோடைகாலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் நாடு முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியான நிலையில், சுமார் 2.5 கோடி கோழிகளும் அதிக வெப்பத்தால் இறந்தன. இதன் விளைவாக கோழிக்கறி, முட்டை விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இவற்றில் 55 சதவீதம் கோழிகள் நாட்டின் வடக்கு, வட மேற்கு மாநிலங்களில் இறந்தன. இந்த இழப்பால் இந்திய கோழிப் பண்ணைத் தொழிலில் சுமார் ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த மாதம் (பண்ணை விலையில்) கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்கப்பட்ட கறிக்கோழிகளின் விலை 30 சதவீதம் உயர்ந்து, கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ கோழிக்கறியின் சில்லறை விலை கிலோ ரூ.180 வரை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 24 கோடி கோழிகள் வளர்க்கப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சராசரியாக கோடைகாலத்தில் 2-3 சதவீதம் வெயில் தாங்க முடியாமல் இறந்துப் போவது உண்டு. ஆனால், நிகழ் ஆண்டில் 10 சதவீதம் கோழிகள் இறந்து போனதால், இறைச்சியின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

ஆந்திரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் கோழிப் பண்ணையாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். அந்த மாநிலங்களில் இந்த நிலைமை சீராக இன்னும் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால், கறிக்கோழி விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சிகளைக் காட்டிலும் கோழிக்கறி 50 சதவீதம் விலை குறைவாக உள்ளதால், நுகர்வு அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் என்று பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

புத்துணர்வு பெறும் முட்டைக்கோழி பண்ணைகள்: நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் விலையை ரூ.3.70 என என்இசிசி நிர்ணயித்தது. இதில், 10 முதல் 20 காசுகள் வரை விலை குறைத்து, பண்ணையாளர்கள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இப்போது உள்ள நிலையில் முட்டைக்கு நிகர விலையாக ரூ.3.50 வரை கிடைக்கிறது. இதனால், முட்டை கோழிப் பண்ணையாளர்கள் தொடர் இழப்பிலிருந்து தப்பித்துள்ளனர்.

முட்டை விலை ரூ.4 வரை உயர வாய்ப்புள்ளது என என்இசிசி அறிவித்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்கிறார் தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

கடந்த 3 ஆண்டுகளாக முட்டை கோழிப் பண்ணையாளர்கள் கடும் இழப்பைச் சந்தித்து வந்தனர். இதனால், ஆண்டுதோறும் சராசரியாக 10 பண்ணைகள் மூடப்பட்டன.

இப்போது அதிகரித்து வரும் முட்டை விலை உயர்வு பண்ணையாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. முட்டை விலை ரூ.4 வரை உயர்ந்து, 6 மாதங்களுக்கு அதே விலையில் நீடிக்க வாய்ப்புள்ளது.

இந்த விலை உயர்வு ஓராண்டு வரை நீடித்தால், கடந்த காலத்தில் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடியும். மூடப்படும் நிலையில் உள்ள பண்ணைகளும் முடிவைக் கைவிடும் நல்ல சூழல் உருவாகும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT