சேலம்

சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! பூலாம்பட்டியில் நீச்சல் பயிற்சி

தினமணி

சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5 பேர், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதியில் தீவிர நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த லீ கிளப் என்ற தன்னார்வ நீச்சல் பயிற்சி மையம், 2019-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், கலந்துகொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளி (மனநலம் குன்றியவர்கள்) மாணவர்களை தயார் செய்து வருகிறது. சென்னை கோயம்பேடு பகுதியில் இயங்கி வரும் இந்த மையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கட்டணமில்லாமல் நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த மையத்தில் நீச்சல் பயிற்சி பெற்று வரும் சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் கோகுல் (14) 2019-இல் அபுதாபியில் நடைபெற உள்ள மனநலம் குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் இளையோர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் தேர்வாகியுள்ள இவர், தற்போது சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் முகாமிட்டு தீவிர நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவருடன் சென்னை எழும்பூரைச் சேர்ந்த தேஜஸ் (7), ஸ்ரீ ஹசன் (9), சாய் விக்னேஷ் (11), பிரணவ் (7) ஆகியோர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கதவணை நீர்த்தேக்கப் பகுதியான சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பகுதியிலிருந்து,

மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை வரையிலான 2 கிலோ மீட்டர் தூரம் நீர்ப்பரப்பை சுமார் 8 நிமிடங்களில் நீந்தி கடந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றனர் இந்த மாணவர்கள். மனவளர்ச்சி சற்று குறைந்த போதும் தாங்கள் மற்றவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தங்களின் செயல்பாடுகள் மூலமாக இம்மாணவர்கள் நிரூபித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கு சென்னை லீ கிளப்பில் பயிற்சியாளராகப் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), வீரமணி (32), பாஸ்கர் (22) ஆகியோர் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT