வாழப்பாடியில் தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.
அதனால், சேலம் மாவட்ட அளவில் தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி பகுதி முக்கிய பங்கு வகிக்கின்றது. வயலில் இருந்து தக்காளியை அறுவடை செய்து, தரம்பிரித்து, வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தினசரி சந்தைக்கு கொண்டு சென்று ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தக்காளியை கொள்முதல் செய்து செல்கின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழையில்லாததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் பாசனத்துக்கு வழியின்றி தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. இந்த நிலையில், கல்வராயன் மலை கிராமங்கள், தலைவாசல் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.அதனால், வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 25 முதல் 28 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.600 வரையும், 10 கிலோ எடை கொண்ட ஒரு கூடை ரூ.200 வரையும் மட்டுமே விலை போகிறது. வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தக்காளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், வாழப்பாடி பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி வட்டார காய்கறி விவசாயிகள் சங்க தலைவர் ஆர். முருகன், சேலம் மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:
வாழப்பாடி பகுதி விவசாயிகள் தக்காளியை விரும்பி பயிரிட்டு வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் தற்போது வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு தக்காளி விற்பனைக்கு வருவதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வாழப்பாடி பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் தக்காளி உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை வீழ்ச்சி அடைவதால், பயிரிட்டு அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கே உரிய விலை கிடைப்பதில்லை. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ. 2-க்கு மட்டுமே விலை போகிறது. அதனால், தோட்டத்தில் விளைந்து கிடக்கும் தக்காளியை அறுவடை செய்வதையே விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். விலை வீழ்ச்சி அடையும் தருணத்தில் நூற்றுக்கணக்கான டன் தக்காளி, விலை போகாமலும் பயன்பாடின்றியும் அழுகிப் போகிறது.
எனவே, தக்காளி உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் தக்காளியை கொள்முதல் செய்து பதப்படுத்தி, ஜூஸ், ஊறுகாய், தொக்கு போன்ற மதிப்புக்கூட்டு உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக, தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்து கூடுதல் வருவாய் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.