சேலம்

கோயில் திருவிழாக்களால் புத்துணர்வு பெறும் கரகாட்டக் கலை

சேலம் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் மக்கள் வழிபட்டுவரும் கோயில் திருவிழாக்களில் கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளக் கச்சேரி உள்ளிட்ட கிராமியக் கலைகளுக்கு

தினமணி

சேலம் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் மக்கள் வழிபட்டுவரும் கோயில் திருவிழாக்களில் கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளக் கச்சேரி உள்ளிட்ட கிராமியக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், அழிவின் விளிம்பில் இருக்கும் கிராமியக் கலைகள் மீண்டும் புத்துணர்வு பெற்று வருகின்றன.
 கிராமப்புற மக்களிடையேயும் மேற்கத்திய நாகரிகம் தொற்றிக் கொண்டதால், தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கரகம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், நையாண்டி மேளக் கச்சேரி போன்ற கிராமியக் கலைகளுக்கு வரவேற்பு குறைந்து போனது.
 விரும்பும் சினிமா, ஒலி-ஒளிக் காட்சிகள், சின்னத்திரை தொடர்கள் மட்டுமின்றி, உடனுக்குடன் உலகின் பல்வேறு பகுதியில் நிகழும் விநோத நிகழ்வுகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே செல்லிடப்பேசியில் கண்டுகளிக்கும் வசதிகள் குக்கிராமங்களிலும் சர்வ சாதாரணமாகிவிட்டன. அதனால், உடலை வருத்தி கிராமியக் கலைஞர்கள் நிகழ்த்தும் கிராமியக் கலைகளின் மீதான ஆர்வம் கிராமப்புற மக்களிடையே மங்கி வருகிறது.
 பெரும்பாலான கோயில் திருவிழாக்கள், திருமணம் போன்ற இல்ல விழாக்களிலும் கூட இசை நிகழ்ச்சிகள், திரைப்பட நடன நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால், நம் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் பாரம்பரிய கிராமியக் கலைகள் நலிந்து வருகின்றன.
 இந் நிலையில், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, பேளூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல் பகுதி கிராமங்களில், மக்கள் குலதெய்வமாக கருதி வழிபட்டுவரும் காவல் தெய்வக் கோயில் திருவிழாக்களில், இன்றளவும் சத்தாபரண தினத்தன்று கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம் உள்ளிட்ட கிராமியக் கலைகளை நடத்துவதை மரபாகத் தொடர்ந்து வருகின்றனர். அதனால், அழிவின் விளிம்பில் இருந்து மீண்ட கிராமியக் கலைகள் மீண்டும் புத்துணர்வு பெற்று வருகின்றன.
 சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் ஆடி மாதத்தில் மாரியம்மன், செல்லியம்மன், முனியப்பன், கருப்பனார் போன்ற காவல் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாக்களில் நிறைவு நாளான சத்தாபரணத்தன்று கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேள நிகழ்ச்சிகள் தவறாமல் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 வாழப்பாடியில் கடந்த ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்ற தேர்த் திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் கரகம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. இதை ஏராளமானோர் விடிய விடிய விழித்திருந்து கண்டுகளித்தனர்.
 இதுகுறித்து வாழப்பாடியைச் சேர்ந்த நையாண்டி மேள கிராமியக் கலைஞர் மு.சண்முகம் (50) கூறியது:
 சேலம் மாவட்டத்தில் கிராமப்புற காவல் தெய்வங்களுக்கு விழா எடுக்கும் போது நிறைவு நாளை சத்தாபரணம் என்ற பெயரில் வாண வேடிக்கையுடன் கொண்டாடுகின்றனர். அத்தோடு அன்றிரவு கிராமியக் கலைஞர்களை வரவழைத்து கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் நையாண்டி மேளக் கச்சேரி நடத்தி நிறைவு செய்வதை இன்றளவும் மரபாகத் தொடர்ந்து வருகின்றனர். அதனால், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, மன்னாயக்கன்பட்டி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிராமியக் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

SCROLL FOR NEXT