கோடைக்கு முன்பே வறண்டு போகும் அபாயத்தில் மேட்டூர் அணை
மேட்டூர் அணை கோடைக்கு முன்பே வறண்டு போகும் அபாயம் உள்ளது.
மேட்டூர் அணை கோடைக்கு முன்பே வறண்டு போகும் அபாயம் உள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய காவிரிநீரை வழங்காத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 100 கனஅடிக்கு குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் குடிநீர் தேவைகளுக்காக அணையிலிருந்து நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் வரை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
தற்போது மேட்டூர் அணையில் 14 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. நீர்வரத்து சரிந்த நிலையில் தொடர்ந்து குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் கோடைக்கு முன்பாகவே மேட்டூர் அணை வறண்டு போகும் அபாயம் உள்ளது. அணை வறண்டுபோனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தென்மேற்கு பருவமழை காலங்களில் கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு உபரிநீர் திறக்கப்படும்.
அதனால் எதிர்வரும் ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது கேள்விகுறியாக உள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகள் தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனம் கடும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் எதிர் வரும் ஆண்டும் டெல்டா பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது.
கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தமிழக அரசு உடனடியாகக் கேட்டுப்பெற வேண்டும். மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணை நீர் மட்டம் 43.69 அடி
மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 43.69 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 48 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.06 டி.எம்.சியாக இருந்தது.