சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 
 கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாடு பகுதியிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதனால் கபினி அணை நிரம்பி, அங்கிருந்து நொடிக்கு 50,000 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை காலை நொடிக்கு 34,231 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர் வரத்து,  வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 38,916 கன அடியாகவும், மாலையில் 43 ஆயிரம் கன அடியாகவும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.  வியாழக்கிழமை காலை 71.76 அடியாக இருந்த நீர்மட்டம்,  வெள்ளிக்கிழமை காலை 75.36 அடியாகவும், மாலையில் 77 அடியாகவும் உயர்ந்துள்ளது. 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும், மேட்டூர் அணையின் நீர் வரத்து திருப்திகரமாக இருப்பதாலும்,  அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.  நடப்பு ஆண்டில் அக்டோபருக்கு முன்பாகவே சம்பாவுக்கு தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.  கடந்த 5 ஆண்டுகளாக நிரம்பாத மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் பருவமழை காரணமாக நிரம்பும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் நடப்பு ஆண்டில் குறுவை பாதித்தாலும்,  சம்பா தாளடி பயிர்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைக்கும் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 120 அடியாக உயர்ந்துள்ளது.  சனிக்கிழமை அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அவ்வாறு நிரம்பினால் அந்த அணையிலிருந்தும் உபரி நீர் திறக்க ப்படும். அந்த உபரி நீரும்  மேட்டூர் அணைக்கு வந்தால், இன்னும் பத்து நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும்.  முப்பது நாள்களில் மேட்டூர் அணை நிரம்பும்  வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT