சீரான குடிநீர் விநியோகம் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு, அண்ணாநகர் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் கோரி அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு, அண்ணாநகர் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் கோரி அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமப் பகுதிக்கு உள்பட்ட அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு, நீர்ஏற்றும் மின்மோட்டார் பழுதானதால் அப்பகுதிக்கு சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், தங்கள் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையை சீர்செய்யவேண்டும் என கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த எடப்பாடி போலீஸார் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள், சமாதானப்பேச்சுவார்தை நடத்தி விரைவில் அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்படும் எனக் கூறியதன் பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.