முகப்பு
சேலம்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட இருவர் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட இருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட இருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. 
சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.  இவர் தனது சகோதரர் மணிகண்டன் என்பவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான காமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 சதவீதம் ஊக்கத் தொகை தருவதாகக் கூறியதால்,  தன்னுடைய சொத்து மற்றும் நண்பர்களிடம் வாங்கிய தொகை என சுமார் ரூ.6 கோடியே 53 லட்சத்தை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  தற்போது அந்த தொகையை தனக்கு தராமல் மணிவண்ணன் ஏமாற்றி வருவதாகக் கூறி,  மாநகரக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில்,  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது சகோதரருடன் வந்த கார்த்திகேயன்,  ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காகக் காத்திருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.  இதையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்,  அங்கு நடத்திய ஆய்வில், கார்த்திகேயன் விஷம் அருந்தியிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து,  ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே,  கார்த்திகேயன் கொண்டுவந்த மனுவில்,  நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாங்கிய தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில்,  காவல்துறையில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று பணத்தை ஏமாற்றிய மணிவண்ணன்,  அவரது சகோதரர்கள் ரௌடி கும்பலை வைத்து மிரட்டி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
பெண் தற்கொலை முயற்சி... இதற்கிடையே, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தைலம்மாள் என்ற பெண்,  தனது காதல் கணவர் விஜயகுமார் அவரது தாயின் பேச்சைக் கேட்டு தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டதாகவும்,  தனது குழந்தைகளையும் தன்னிடம் அனுப்ப மறுப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 
இதையடுத்து,  அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.   
   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →