சேலம்

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார். 
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
   தமிழகத்தில்  வட கிழக்குப் பருவமழை குறித்து ஏற்கெனவே தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச்  சேர்ந்த உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.  வடகிழக்குப் பருவமழை காலத்தில் எவ்வாறு பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து அதிகாரிகளிடத்தில் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  கஜா புயலினால் திருவாரூர்,  நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது.  மேலும்,  வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவிலே 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. 
 புயல் காரணமாக  நாகை மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.  இதுவரை 13 பேர் இறந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சேத மதிப்பு விவரம் குறித்து கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
மேலும், கஜா புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள்,  குடிசையில் வசித்தவர்கள் சுமார் 82,000 பேர் பாதுகாப்பாக  471 முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக உயிர்ச் சேதம்,  மக்களுக்குப் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.  கஜா புயலால் மின்கம்பங்கள் சாய்ந்திருந்தால் மாற்றியமைப்பதற்கு சுமார் 7,000 மின் கம்பங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.  மேலும், மின் கம்பங்கள் ஏதாவது பாதிப்பு அடைந்துள்ளதா என்பதைக் கணக்கிட்டுச் சரி செய்ய மின் வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீனவர் பாதிப்பு கணக்கெடுப்பு:
மீனவர்களுக்கான பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  கரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் சில பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 
மீன்வளத் துறையும், வருவாய்த் துறையும் சேர்ந்து, சேதம் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அளித்தப் பிறகு,  மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி நேரடியாக கடலோர மாவட்ட ஆட்சியர்களிடத்தில் தொடர்பு கொண்டு புயல் பாதிப்பு விவரங்களையும்,  மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய பணி விவரங்களையும் உடனுக்குடன் தெரிவித்து வருகிறார்.

மக்கள் அச்சப்பட தேவையில்லை:
கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவேன். மக்கள் அச்சப்படத் தேவையில்லை.  தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு செய்யும்.  கஜா புயல் மிகவும் தீவிரமாகவுள்ளதால், ஒரு சில பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் நிதி கோரப்படும்:
கஜா புயலின் வேகம் குறைந்து கொண்டு வருகிறது.  மின் கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்துள்ளன.  கடல் சீற்றத்தினால் கடலோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. 
மேலும், நேரில் சென்று பார்த்து பிறகு தான் அதிகாரிகள் அறிக்கை அளிப்பார்கள்.  சேதம் மதிப்பீடு கணக்கிடப்பட்டு,  அதற்குத் தக்கவாறு மத்திய அரசிடம் நிதி உதவி கேட்கப்படும்.

மத்திய அரசு நிதி வழங்கவில்லை:
வர்தா புயல் பாதிப்பு நிதி மத்திய அரசு கொடுக்கவில்லை.  இதற்கு முன்பிருந்த மத்திய அரசும்,  புயலால் ஏற்பட்ட சேதங்கள் முழுவதற்கும் தேவையான நிதியை வழங்கவில்லை. 
சேத மதிப்பீடு விவரங்களை அளித்தோம்.  அதற்கு குறிப்பிட்ட அளவுதான் நிதி ஒதுக்கப்பட்டது.  மாநில அரசின் நிதியில்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி:
வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மின்வாரியத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை,  உள்ளாட்சித் துறை என பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு,  சேதங்களை மதிப்பிட்டு, அதற்குத் தேவையான பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, முழு வீச்சுடன் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  நிவாரணங்கள் வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT