சேலம்

ராசிமணலில் அணை கட்டுமானப் பணிகளை அரசு தொடங்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

DIN

மேட்டூர்  அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டுமானால், ராசிமணலில் அணை கட்டும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மேட்டூரில்  அணையை புதன்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதனையறிந்த,  8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் சம்பா நேரடி விதைப்பு மற்றும்  நாற்றுவிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20-இல் தொடங்கவுள்ள நிலையில், பாதிப்பில்லாமல் அதற்கு முன்னதாக குறிப்பிட்ட அளவுக்கு பயிர்களை வளர்க்க வேண்டும். இதற்கு ஏற்ற 155 நாள்கள் வயதுடைய நீண்டகால ரகமான 1009,  சொர்ணாசப்  போன்ற விதைகளைப் பயன்படுத்தி நேரடி விதைப்பு மற்றும் நாற்றுவிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடுத்தர கால 135 நாள் விதைகளை செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும்.
தற்போது வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து விடுவிக்கப்படுவதால், கல்லணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிநீரே வந்து சேரும். கல்லணையிலிருந்து பாசனத்துக்கு காவிரி மற்றும் வெண்ணாறுகளில் முழு பாசன அளவான தலா 9,500 கன அடியும், கல்லணை கால்வாயில் 3,000 கனஅடியும்,  வழியோர மாவட்டங்களுக்கு சுமார்  2 ஆயிரம் கன அடி என  மொத்தம் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் தேவைப்படும்.  மேட்டூர் அணையிலிருந்து குறைந்தபட்சம் 25,000 கன அடி தண்ணீரை திறந்துவிட்டால்தான் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பயன்பெறமுடியும்.  நொடிக்கு 10,000 கனஅடி விடுவிக்கப்படுவதால், பயன்பெறமுடியாத நிலை உருவாகி உள்ளது. 
    எனவே 15 நாள்கள் வரை தொடர்ந்து நொடிக்கு 25 ஆயிரம் கன அடி  தண்ணீரை விடுவித்து  கடமடைவரை நீரைக் கொண்டு சென்று பாசனத்தை உறுதிப்படுத்தி, சாகுபடிப் பணிகளைத் தொடங்கிடவும்,  ஏரி, குளம், குட்டைகளை நிரப்பிடவும்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  இல்லையெனில்,  தண்ணீர் வீணாவதைத் தடுக்க மேட்டூர் அணையை மூடிவிட வேண்டும்.
மேட்டூர் அணையின் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க ராசி மணலில் அணை கட்டுமானப் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.  கோதாவரி,  காவிரி இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என மத்திய அரசு கைவிட்ட நிலையில், அதுகுறித்து முதல்வர் நம்பிக்கையோடு பேசுவது பிரச்னைகளை திசை திருப்பும் முயற்சியாகும் என்றார்.
இந்தப் பேட்டியின் போது நாகை மாவட்டச்  செயலாளர் எஸ்.ராமதாஸ்,  துணைச் செயலாளர் திருமருகல்சேகர்,  தருமபுரி மண்டலத் தலைவர் கே.சின்னசாமி,  குடவாசல் ஒன்றியத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT