சேலம்

ஏற்காட்டில்தொலைந்துபோன சுற்றுலா இடங்கள்!

ஏற்காட்டில் ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலிடப்பட்ட சுமார் 80 சுற்றுலா இடங்கள்,  1947-க்குப் பிறகு  தொலைந்து போன இடங்களாக மறைந்து

ஆர். ஆதித்தன்


ஏற்காட்டில் ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலிடப்பட்ட சுமார் 80 சுற்றுலா இடங்கள்,  1947-க்குப் பிறகு  தொலைந்து போன இடங்களாக மறைந்து போயின.
சேலம் மாவட்டம்,  சேர்வராயன் மலையில் ஏழைகளின் ஊட்டி என அறியப்படும் ஏற்காட்டில் விளையும் காபி உலகப் புகழ் பெற்றது.  ஏற்காடு என்றாலே மலைச் சாலைகளில் பயிரிடப்பட்டுள்ள காபி தோட்டங்களும்,  பகோடா பாயின்ட், லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், கரடியூர் காட்சி முனை,  கிள்ளியூர் அருவி ஆகிய சுற்றுலா இடங்களை மட்டுமே நாம் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால்,  ஏற்காட்டில் சுமார் 80 சுற்றுலா இடங்கள் இருப்பதாக ஆங்கிலேயர்கள் பட்டியலிட்டு ஆவணமாக வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.  சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்கள் சேர்வராயன் மலையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலையில் பல்வேறு இடங்களைக் கண்டறிந்து சுற்றுலா இடங்களாக அறிவித்தனர். 
சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஏற்காட்டில் இருந்து வெளியேறிய பிறகு காபி தோட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளில் வெளிநபர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால்,  ஆங்கிலேயர்கள் கண்டறிந்த சுற்றுலா இடங்கள் காலப்போக்கில் மறைந்து போயின.  சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 1820 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயேர்கள் வாழ்ந்து வந்தனர்.  இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் கொண்ட ஆங்கிலேயர்கள்,  ஏற்காடு மலை முழுவதும் சென்று வந்த சுமார் 80 சுற்றுலா இடங்களை வில்லியம் மில்லர் என்பவர் பட்டியலிட்டு,  1890 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.  மேலும், அந்த 80 சுற்றுலா இடங்கள் ஆவணமாக வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு,  அதாவது 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சேர்வராயன் மலையைவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர்.  ஆங்கிலேயேர் சென்ற பிறகு சுற்றுலா இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில்,  சுற்றுலாப் பயணிகளின் பார்வையில் இருந்து சுற்றுலா இடங்கள் மறைந்து போயின.  இப்படி தொலைந்துபோன சுற்றுலா இடங்களில் மிக முக்கியமானது செங்கலத்துப்பாடி குகை மற்றும் செங்கலத்துப்பாடி செங்குத்துப்பாறை ஆகியவையாகும். 
மேலும்,  2016 இல் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட செங்கலத்துப்பாடி காட்சி முனை என்பது புதிதாகும்.  
இதுதொடர்பாக, வரலாற்று ஆய்வாளர் ஏற்காடு இளங்கோ கூறியது:  ஏற்காட்டில் இருந்து 23 கி.மீ.  தொலைவில் உள்ள செங்கலத்துப்பாடி கிராமம் வடக்கில் உள்ள வனப் பகுதியில் இந்த செங்கலத்துப்பாடி காட்சி முனை அமைந்துள்ளது.  இயற்கையாக பாறையின் மீது பெரிய பாறங்கற்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.  இது தரையில் இருந்து சுமார் 1,000 அடி உயரம் கொண்டது.  இந்த மலை முகடு கடல் மட்டத்தில் இருந்து 1247 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  இது செங்குத்தான பாறையிலான சிகரமாகும்.  இங்கிருந்து வத்தல் மலை,  அரூர்,  பள்ளிப்பட்டி,  பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி ரயில் பாதை ஆகியவற்றை காணலாம். 
செங்கலத்துப்பாடி குகை: 
பாறைகள்  சூழ்ந்த பகுதியில் ஒரு பெரிய பாறையின் கீழே குகை ஒன்றுள்ளது.  இரண்டு அறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.  ஒவ்வொரு அறையிலும் 15-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இடம் உள்ளது.  மழைக் காலங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இதன் உள்ளே தங்கி ஓய்வெடுக்கின்றனர்.  குகையில் இருந்து வெளியே சென்றால் ஒரு காட்சி முனை உள்ளது. இதில் இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்.
பிளவு சந்துப் பாறை: 
குகைக்கு அடுத்து சிறிது தூரத்தில் பிளவு சந்துப்பாறை காணப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியமானது. இரண்டு பாறைகளுக்கு இடையே 20 அடி நீளத்தில் சந்து இருக்கிறது. ஒருவர் மட்டுமே நடந்து செல்லும் அளவுக்கு வழி உள்ளது. இதன் வழியாக சென்றால் மறுபக்கத்தில் காட்சி முனை உள்ளது. அதன் எதிரில் பெரிய பெரிய பலகை கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிய அமைப்பு கொண்ட எடுத்து வைச்சான் கல் உள்ளது. 
செங்குத்துப் பாறைகள்: 
குகையை ஒட்டி இரண்டு மிகப்பெரிய செங்குத்துப் பாறைகள் உள்ளன.  ஒன்று சுமார் 400 அடி உயரமும்,  மற்றொன்று 500 அடி உயரமும் உள்ளது. இப் பாறைகள் அச்சில் வார்த்தது போல காட்சி அளிக்கின்றன.  பிரம்மாண்ட அமைப்பின் அடிப்படையில் சுற்றுலா இடமாக ஆங்கிலேயர்கள் அறிவித்திருக்கின்றனர். இந்த சுற்றுலா இடங்களுக்குச் செல்ல போதிய வசதி கிடையாது.  தனி நபர்கள் செல்வது மிகவும் ஆபத்தானது.  சுற்றுலாத் துறை மூலம் பாதை வசதி அமைத்து,  பாதுகாப்பு வேலிகள் அமைத்தால் சிறந்த சுற்றுலா தலமாக மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT