சேலம்

முதுகெலும்பு வளைந்த மாணவிக்கு அரிய சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை

DIN

முதுகெலும்பு வளைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மாணவியை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அரிய சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எழுந்து நடமாட முடியாமல் இருந்த அந்த மாணவி, தற்போது நலமுடன் இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சிக்கலான சிகிச்சை நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் கால்கள் செயலிழந்த நிலையில், கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அப்பெண்ணின் முதுகெழும்பு நெகிழ்வுத் தன்மையை இழந்து வளைந்திருப்பது தெரியவந்தது. நீரோ ஃபைப்ரோமா எனப்படும் நரம்பு நார்க் கட்டி காரணமாக இந்த பாதிப்பு ஏற்படும். இந்த விநோத நோய்க்கு உடலுடன் பொருத்தக் கூடிய சிறப்பு மருத்துவக் கருவியின் மூலம் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அப்பெண்ணுக்கு "ஹாலோ வெஸ்ட்' எனப்படும் சாதனம் பொருத்தப்பட்டு, முதுகு எலும்பை நேராக்குவதற்கான நடவடிக்கைகள் அக்கருவியில் உள்ள திருகாணிகள் மூலமாக
மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை திருகாணிகள் இறுக்கப்பட்டு முதுகெலும்பு சீராக்கும் சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் வளைந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைவதற்கு எலும்பு மஜ்ஜைகள் தேவைப்பட்டன. அவை அப்பெண்ணிடம் இருந்தே எடுக்கப்பட்டு தேவையான இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன.
தொடர் சிகிச்சை காரணமாக தற்போது அப்பெண் தாமாகவே நடக்கக் கூடிய நிலையில் உள்ளார். தனியார் 
மருத்துவமனையில் இந்த வகையான சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். ஆனால், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்கப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, நிலைய மருத்துவர் டாக்டர் இளங்கோ, அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT