சேலம்

125 ஆண்டு ஆங்கிலேயர் கால ஏற்காடு காவல் நிலையம் சீரமைக்கப்படுமா?

ஆர். ஆதித்தன்

ஏற்காடு மலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த காவல் நிலையத்தை சீரமைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சேலம் மாவட்டத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 5,326 அடி உயரத்தில் அமைந்துள்ள சேர்வராயன் மலைப் பகுதியில் உள்ள ஏற்காடு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாக உள்ளது.
 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்த போது ஆட்சியராக இருந்த டி. காக்பர்ன் 1820-1829 ஏற்காட்டில் காபியை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என சுற்றுலா பகுதியாக அறியப்படும் ஏற்காட்டில் காபி, ஆரஞ்சு, பலாப்பழம், மலை வாழைப்பழம், மிளகு, கிராம்பு ஆகியவை விளைவிக்கப்படுகிறது.
 தற்போது, ஏற்காட்டில் நட்சத்திர ஹோட்டல், சொகுசு விடுதிகள் நூற்றுக்கணக்கில் கட்டப்பட்டுள்ளன. ஏற்காட்டில் ஆங்கிலேயர் காலத்தில் 1894-இல் கட்டப்பட்ட காவல் நிலையம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.
 தமிழகத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பழமையான காவல் நிலையங்களில் ஏற்காடு காவல் நிலையமும் அடங்கும். ஏற்காட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட காவல் நிலையம் அருகே புதிய காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், 1894 இல் கட்டப்பட்ட ஏற்காடு காவல் நிலையம் தற்போது பெய்த மழை காரணமாக கட்டடத்தின் முகப்பு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
 நூற்றாண்டு பழமை இந்தக் காவல் நிலையத்தை சீரமைத்து, பராமரித்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, இயற்கை ஆர்வலர் ஏற்காடு இளங்கோ கூறியது:
 சேலம் ஆட்சியராக இருந்த அலெக்ஸாண்டர் ரீட் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள் ஏற்காடு மலையைக் கண்டறிந்து வந்து போனதாக தகவல்கள் உள்ளன. சேலம் ஆட்சியராக டி. காக்பர்ன் இருந்த போது (1820-29) காபி, ஆரஞ்சு ஆகியவை கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டது.
 இதமான ரம்மியான குளிர் சீதோஷ்ண நிலையில் இருந்ததால் ஆங்கிலேயர்கள் வருகை அதிகரித்தது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் சிக்கிய ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கைதிகளும் ஏற்காடு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர்.
 முதல் உலகப்பேரில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அமீர் ஆயுப்கான் குடும்பத்தினர் ஏற்காடு கொண்டு வரப்பட்டு கைதிகளாக சிறை வைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஆப்கனை சேர்ந்த அப்துல்காசிம் என்ற கைதி தனது ஏற்காட்டில் அடைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈச்சங்காடு பங்களாவில் கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 மேலும் போர் கைதிகளை கொண்டு அசம்பூர் தேவாலயத்தை ஆங்கிலேயர்கள் கட்டியுள்ளனர். இதுபோல போர் கைதிகளை அடைத்து வைக்கப்பட்ட இடமாக ஏற்காடு இருந்ததால் ஆங்கிலேயர்கள் காவல் நிலையம் கட்டியுள்ளனர். ஏற்காட்டில் காவலர்கள் தங்கவும், துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளவும் இடம் இருந்தது. தற்போது அது காலப்போக்கில் மறைந்துவிட்டது.
 ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆங்கிலேயர் கால சிறை போதிய பராமரிப்பின்றி உள்ளது. ஆங்கிலேயர் காஃபி தோட்டங்களில் கலை நயத்துடன் கட்டிய கட்டடங்கள் தனியார் பராமரிப்பில் உள்ளது. அதேநேரத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆங்கிலேயர் காலத்தின் நூற்றாண்டு கட்டடங்களை பாதுகாத்து சீரமைத்திட வேண்டும் என்றார். இந்திய கலை மற்றும் கலாசாரத்துக்கான தேசிய அறக்கட்டளை சேலம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சரவணன் கூறியது:
 கடந்த 2011-இல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஏற்காடு காவல் நிலையத்தை இடிக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதனிடையே ஏற்காடு காவல் நிலையத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடவடிக்கை எடுத்தோம்.
 தமிழக டிஜிபி மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதையடுத்து புதிய காவல் நிலையம் கட்டுவதற்காக இடிக்கப்படவிருந்த ஆங்கிலேயர் கால கட்டடத்தை இடிக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது.
 எனவே , ஆங்கிலேயர் கால கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் காவல் நிலையத்தை அருங்காட்சியகமாக சீரமைத்திட தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT