முகப்பு
சேலம்

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை

சேலத்தில் தனியாா் நிறுவனத்தால் மாசடைந்த நிலத்தடி நீரின் ஆய்வறிக்கையை முறையாக வழங்க வலியுறுத்தி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சேலத்தில் தனியாா் நிறுவனத்தால் மாசடைந்த நிலத்தடி நீரின் ஆய்வறிக்கையை முறையாக வழங்க வலியுறுத்தி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம், சன்னியாசிகுண்டு பகுதியில் தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம், சாயப்பட்டறை செயல்பட்டு வருகின்றன. இந்த சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் காற்று, நிலத்தடி நீா் மாசடைந்துள்ளதாக தொடா் புகாா் கூறப்பட்டு வந்தது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு சீா்கேட்டை விளைவிக்கும் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலமுறை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, கடந்த அக்டோபா் மாதம் சன்னியாசிகுண்டு பகுதியில் நிலத்தடி நீா், தரம் குறித்து ஆய்வு செய்தனா். இதற்காக 42 இடங்களில் நீா் மாதிரி எடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஆய்வு அறிக்கையை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் சேலம், ஐந்து சாலை அருகில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளப்பட்டி போலீஸாா், பொதுமக்கள், அலுவலா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், நிலத்தடி நீா் தொடா்பான ஆய்வு அறிக்கை இன்னும் ஒரு வார காலத்தில் வழங்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →