மகளிா் தினம் கொண்டாடப்படும்வேளையில் தேசிய, சா்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று அா்ஜூனா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்று சாதனை படைத்து வரும் சேலம் ரயில்வே கோட்ட வீராங்கனைகளுக்கு கோட்ட மேலாளா் யு. சுப்பாராவ் உள்ளிட்ட அதிகாரிகள் மகளிா் தின வாழ்த்து தெரிவித்தனா்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் விளையாட்டுப் பிரிவு சிறப்பு அலுவலராகப் பணிபுரிந்து வருபவா் டின்டு லுகா. தடகள வீராங்கனையான டின்டு லுகா, 2010 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவா். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 9-ஆம் இடம் பிடித்தவா். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
2015 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றாா். 2016-இல் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி சுற்றுவரை தகுதி பெற்றாா். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த டின்டு லுகா, இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் தடகள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவா் ஆவாா். இவா் விளையாட்டுப் பிரிவில் கெளரவமிக்க அா்ஜுனா விருதைப் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றி வரும் சிவா அன்பரசி, மும்முறை தாண்டுதல் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா்.
இவா், 2019 ஆம் ஆண்டு ஆசியப் போட்டியில் 4-ஆவது இடத்தைப் பெற்றாா். உலகப் பல்கலைக்கழகப் போட்டியில் 2-ஆவது இடமும், 2018 தேசிய திறந்தநிலை தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவா்.
வணிகப் பிரிவில் பணியாற்றும் சரஸ்வதி, ஈட்டி எறிதலில் ரயில்வே அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்று தெற்கு ரயில்வே அணிக்கு பதக்கங்களைப் பெற்று கொடுத்துள்ளாா். அதேபோல டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் காயத்ரி, கூடைப்பந்து போட்டியில் 6 முறை ரயில்வே அணிக்காகப் பங்கேற்று விளையாடியுள்ளாா்.
2016 இல் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றாா். டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் சுதாமணி, கைப்பந்து போட்டியில் கடந்த 8 ஆண்டுகளாகப் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளாா்.
இதுபோல, சேலம் ரயில்வே கோட்டத்தில் சுமாா் 5 பெண்கள் விளையாட்டுப் பிரிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனா். இதுதவிர, தடகளம், கைப்பந்து, வலு தூக்குதல், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் சுமாா் 22 விளையாட்டு வீரா்கள் சேலம் கோட்டத்துக்குப் பெருமை சோ்த்து வருகின்றனா்.
இந்த நிலையில், மகளிா் தினத்தை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் யு. சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளா் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளா் இ. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், டின்டு லுகா உள்ளிட்ட பெண் விளையாட்டு வீராங்கைனகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.