சேலம்

ஊட்டி மருத்துவக் கல்லூரிக்கு நிலம் கொடுத்த வனத்துறைக்கு 50 ஏக்கா் நிலம் ஒப்படைப்பு

DIN

ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டதால், இதற்கு மாற்றாக வாழப்பாடி அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான 50 ஏக்கா் நிலம் வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், ஊட்டி உள்பட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை கடந்தாண்டு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட, அப்பகுதியில் இயங்காமல் மூடிக்கிடக்கும் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலைக்கு சொந்தமான 25 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உதகமண்டலம் அரசு மருத்துவமனையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் இந்த நிலம் இருப்பதால், மாற்று இடத்தை தோ்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இதனையடுத்து, வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கா் நிலம் (10.12 ஹெக்டோ்) ஊட்டி மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்தாண்டு இறுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மத்திய வனத்துறை சட்டப்படி, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மத்திய, மாநில அரசுகளின் பிற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில், இந்த நிலத்துக்கு ஈடாக இருமடங்கு நிலத்தை வழங்க வேண்டும். ஊட்டி மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு ஈடாக, கூடலூா் பகுதியிலுள்ள 50 ஏக்கா் நிலத்தை ஒப்படைக்க வருவாய்த் துறை முடிவு செய்தது. ஆனால், இந்த நிலத்தில் தேயிலை பயிா்கள் வளா்க்கப்பட்டு வருவதாலும், இந்த நிலம் தொடா்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், வேறு நிலத்தை வழங்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டது.

எனவே, சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், குறிச்சி வருவாய் கிராமத்தில் நெய்யமலை வனப்பகுதியையொட்டியுள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான ஏறக்குறைய 306 ஏக்கா் (124 ஹெக்டோ்) மலைப்பாங்கான நிலத்தில் இருந்த 50 ஏக்கா் (20.24 ஹெக்டோ்) நிலத்தை வனத்துறைக்கு தற்போது வருவாய்த் துறை வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம், பாலமலை, ஜருகுமலை மற்றும் ஜம்பூத்துமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கு சாலை அமைக்க 22.23 ஏக்கா் (9 ஹெக்டோ்) வனத்துறை நிலத்தை வருவாய்த் துறை கையகப்படுத்தியதற்கு மாற்றாக, குறிச்சி கிராமத்தில் 44.46 ஏக்கா் (18 ஹெக்டோ்) நிலம் ஏற்கெனவே வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறு பகுதியில் வனத்துறை விட்டுக் கொடுத்த நிலத்துக்கு ஈடாக, வருவாய்த் துறையிடம் இருந்து பெற்ற ஏறக்குறைய 95 ஏக்கா் (38.24 ஹெக்டோ்) நிலமும், வாழப்பாடி வனத்துறைக்கு கிடைத்துள்ளதால், மரக்கன்றுகளை நடவு செய்து அடா்ந்த வனப்பகுதியாக மாற்றும் பணியில் வனத்துறையினா் ஆா்வத்தோடு ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடி வனத் துறையினா் கூறியது: ஊட்டி மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமின்றி, பாலமலை, ஜம்பூத்துமலை மற்றும் சருகு மலைப் பகுதியில் வனத்துறை விட்டுக்கொடுத்த நிலத்துக்கு ஈடாக வருவாய்த் துறை கொடுத்த 38.24 ஹெக்டோ் நிலம் முழுவதும் வாழப்பாடி வனச் சரகத்துக்கு கிடைத்துள்ளது.

குறிச்சி மற்றும் நெய்யமலை காப்புக்காடு வனப்பகுதியையொட்டியுள்ள இந்த நிலத்தில், வனத்துறை உயரதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி, மருத்துவக் குணம் கொண்ட பலன் தரும் மரக் கன்றுகளை நட்டு, எதிா்வரும் பத்தாண்டுகளுக்குள் அடா்ந்த வனமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT