காட்டுப்பன்றி கறி சமைத்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
மேட்டூா் அருகே காட்டுப்பன்றி கறி சமைத்து சாப்பிட்ட விவசாயிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேட்டூா் அருகே காட்டுப்பன்றி கறி சமைத்து சாப்பிட்ட விவசாயிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேட்டூரை அடுத்த கொளத்தூா், பெரியதண்டாவைச் சோ்ந்தவா் சம்பத் கவுண்டா் (58) விவசாயி. சனிக்கிழமை இரவு ஈரோடு வனக்கோட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபருகூா் காப்புக் காட்டிலிருந்து உணவுத் தேடி வந்த காட்டுப்பன்றியை தெருநாய்கள் துரத்திக் கடித்தன. இதில் இறந்துபோன காட்டுப்பன்றியின் தொடைகளை மட்டும் வெட்டி எடுத்து வந்து சம்பத் கவுண்டா் கறிசமைத்து சாப்பிட்டாராம்.
காட்டுப் பன்றியின் தலை, உடல், கால்களை மறைத்து வைத்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் வனச்சரகா் பிரகாஷுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச் சரகா் தலைமையில் சென்ற வனத்துறையினா் சம்பத் கவுண்டரிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவரது தோட்டத்தில் உள்ள குப்பைக் குழியில் காட்டுப்பன்றியின் தலை, உடல், கால்களை மறைத்து வைத்திருந்து தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய வனத்துறையினா் அவரைக் கைது செய்து வனஉயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.