சேலம்

தினமணி.காம் செய்தி எதிரொலி: தக்காளியைக் கொள்முதல் செய்து பதப்படுத்த தோட்டக்கலைத் துறை பயிற்சி

DIN

வாழப்பாடி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தினமணி. காமில் சிறப்புக் கட்டுரை வெளியானது. இதன் எதிரொலியால், தக்காளி பதப்படுத்தும் நடமாடும் வாகனத்தை அனுப்பிய தோட்டக்கலைத்துறை, விவசாயிகளிடம் தக்காளியை வெள்ளிக்கிழமை நேரடியாக கொள்முதல் செய்தது. தக்காளியை கூழாக்கி பதப்படுத்தி மதிப்புக்கூட்டுவது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில், கிணற்றுபாசன வசதி கொண்ட விவசாயிகள், அனைத்து விதமான உணவு சமைலுக்கும் பயன்படும் தக்காளியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே இயங்கும் தனியார் தினசரி காய்கறி மண்டிகளுக்கு, வாழப்பாடி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் அருநூற்றுமலை,  கல்வராயன்மலை கிராமங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், விழுப்புரம், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், வாழப்பாடி தினசரி காய்கறி மண்டிகளில் ஏலமுறையில் தக்காளியைக் கொள்முதல் செய்து செல்கின்றனர். வாழப்பாடி பகுதி கிராமங்களில், கடந்த இரு மாதங்களுக்குமுன் பெய்த பருவமழையைப் பயன்படுத்தி, ஏறக்குறயை 500 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், தக்காளியை பயிரிட்டனர். கல்வராயன்மலை கருமந்துறை, கரியகோவில் பகுதி மலைகிராமங்களிலும் ஏறக்குறைய 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இதனால், கடந்த ஒரு வாரமாக, வாழப்பாடி தினசரி மண்டிகளுக்கு நாளொன்றுக்கு 10 டன் அளவிற்கு தக்காளி விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், வாழப்பாடி தினசரி மண்டிகளுக்கு தக்காளி கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்து போனது. இதனால், வாழப்பாடியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் ரூ.500 வரை விலை போன 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, கடந்த சில தினங்களாக அதிகபட்சமாக ரூ. 200 வரை மட்டுமே விலை போகிறது. தக்காளியை செடியில் இருந்து பறித்து தினசரி மண்டிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும் செலவிற்கு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், செடியில் விளைந்து கிடக்கும் தக்காளியை அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். விலைபோகாத தக்காளி விளை நிலத்திலேயே உதிர்ந்து வீணாகி வருகிறது. தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி,  நிவாரணம் பெற்றுக் கொடுக்க தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழப்பாடியில் தக்காளி உற்பத்தி அதிகரிக்கும் தருணத்தில், தக்காளி வீணாவதை தடுக்கவும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் தக்காளியை பதப்படுத்தி தக்காளி பழச்சாறு மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாரியம்மன் புதூர் விவசாயி உழவன். இரா. முருகன்(46). பேட்டியுடன், தினமணி. காம் இணைய இதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.

தினமணி.காம் செய்தி எதிரொலியால், சேலம் மாவட்ட தோட்டக்கலைத் துறையில் இயங்கி வரும்,  தக்காளி பதப்படுத்தி கூழாக்கும் நடமாடும் வாகனத்தை,  சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சத்யா வாழப்பாடிக்கு அனுப்பிவைத்தார். குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு, ரூ.5 விலை நிர்ணயித்து, வாழப்பாடி தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கலைவாணி, கோதைநாயகி, உதவி அலுவலர்கள் விஜயகுமார், கனகா காயத்ரி ஆகியோர் விவசாயிகளிடம் நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்தனர். இத்தோடு தக்காளியை பதப்படுத்தி, கூழாக்கி, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் உத்திகள் குறித்தும் நடமாடும் வாகனத்தில் வாயிலாக விவசாயிகளுக்கு பயிற்சியும் அளித்தனர். இதனால், வாழப்பாடி பகுதி தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பயிற்சி முகாமில் முன்னோடி விவசாயிகள் எம்ஜிஆர்.பழனிசாமி, உழவன் இரா. முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT