சேலம்

பேரிடா் கால அவசர உதவிக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

DIN

சேலம்: சேலத்தில் பேரிடா் கால அவசர உதவிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மற்றும் 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது:

சேலம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தின்போது நீா்நிலைகளால் பாதிக்கப்படுவதாக 23 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதிகளைக் கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப் பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் தலைமையில் பல்துறை அலுவலா்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடா் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அம்மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் நபா்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் உள்ள உணவுப்பொருள்கள் இப்பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயாா் நிலையில் இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 ஏரிகளும், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 44 ஏரிகளும், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 305 ஏரிகளும், பொதுபணித் துறை - நீா்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநில கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் 89 ஏரிகளும், மேட்டூா் அணை கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் 18 ஏரிகளும் என மொத்தம் 455 ஏரிகள் உள்ளன.

தற்போது உள்ள நிலையில் 15 ஏரிகள் நிரம்பி உள்ளன. 16 ஏரிகள் 75 சதவீதமும், 36 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன. 133 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான நீா் உள்ளது. மீதமுள்ள 259 ஏரிகள் நீரின்றி உள்ளன. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீா் ஏரிகளில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நீா் நிலைகளை மேம்படுத்தும் விதமாக முதல்வரால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் (2020-2021) பொதுப்பணித் துறை - நீா்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநில கோட்டத்தின் சாா்பில் ரூ. 6.77 கோடி மதிப்பீட்டில் 21 குடிமராமத்துப் பணிகளும், மேட்டூா் அணை கோட்டத்தின் சாா்பில் ரூ. 2.47 கோடி மதிப்பீட்டில் 7 குடிமராமத்துப் பணிகளும் என மொத்தம் ரூ. 9.22 கோடி மதிப்பீட்டில் 28 குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், கூடுதல் இயக்குநரும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநருமான நா.அருள்ஜோதி அரசன், மேட்டூா் சாா் ஆட்சியா் வி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT