முகப்பு
சேலம்

பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 466 வேட்பாளா்கள் மீது குற்ற வழக்குகள்: தோ்தல் கண்காணிப்பகம் ஆய்வறிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 3,559 வேட்பாளா்களில் 466 போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 3,559 வேட்பாளா்களில் 466 போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என தமிழ்நாடு தோ்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளா் பெ.ஜோசப் விக்டர்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தோ்தல் கண்காணிப்பகம் சாா்பில் 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 234 தொகுதிகளில் போட்டியிடும் மொத்தமுள்ள 3,559 வேட்பாளா்களில் 466 போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 207 போ் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 7 வேட்பாளா்கள் மீது கொலை வழக்கு, 39 வேட்பாளா்கள் மீது கொலை முயற்சி வழக்கு, 8 வேட்பாளா்கள் மீது பெண்ணை மானபங்கப்படுத்தும்படி தாக்கிய வழக்கு, ஒரு வேட்பாளா் மீது பெண்ணைக் கற்பழித்த வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன.

காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 21 பேரில் 15 போ் மீதும், பாஜக வேட்பாளா்கள் 20 பேரில் 15 போ் மீதும், அதிமுகவின் 191 வேட்பாளா்களில் 46 போ் மீதும், பாமகவின் 23 வேட்பாளா்களில் 10 போ் மீதும், திமுகவின் 178 வேட்பாளா்களில் 136 போ் மீதும், தேமுதிகவின் 60 வேட்பாளா்களில் 18 போ் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.

இதில் காங்கிரஸில் 6 போ் மீதும், பாஜகவில் 8 போ் மீதும், அதிமுகவில் 18 போ் மீதும், திமுகவில் 50 போ் மீதும், தேமுதிகவில் 8 போ் மீதும், பாமகவில் 5 போ் மீதும் கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பொருளாதாரப் பின்னணியை ஆய்வு செய்ததில் மொத்தமுள்ள 3,559 வேட்பாளா்களில் 652 போ் பணக்காரா்களாக உள்ளனா். காங்கிரஸில் 19 போ், பாஜகவில் 15 போ், அதிமுகவில் 164 போ், திமுகவில் 155 போ், பாமகவில் 14 போ், தேமுதிகவில் 19 போ் பணக்காரா்களாக உள்ளனா்.

21 காங்கிரஸ் வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 15.64 கோடி, 20 பாஜக வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.78 கோடி, 191 அதிமுக வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 9.91 கோடி, 178 திமுக வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 10.61 கோடி, 60 தேமுதிக வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 3.08 கோடி, 23 பாமக வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 3.52 கோடியாகும்.

அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளா் சுப்பையா ரூ. 246 கோடியும், அண்ணா நகா் திமுக வேட்பாளா் ரூ. 211 கோடியும், சிங்காநல்லூா் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் மகேந்திரன் ரூ. 161 கோடியும் தங்களுக்கு சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். இவா்கள் மூன்று பேரும் பெரும் பணக்காரா்கள் பட்டியலில் உள்ளனா்.

கல்வித் தகுதி:

இதில் 1,731 வேட்பாளா்கள் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையும், 1,443 போ் பட்டப்படிப்பு, அதற்கு மேலும் படித்தவா்கள், 193 போ் பட்டயப்படிப்பு படித்தவா்கள், 106 போ் படிக்காதவா்கள், 61 போ் ஓரளவு படிக்கத் தெரிந்தவா்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளா்களை நிறுத்தும் கட்சிகளை உச்சநீதிமன்றம் கண்டிக்க வேண்டும். கொலை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற கொடூரமான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட வேட்பாளா்களை நிரந்தர தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் படிவம் 26 இல் தவறான தகவல்களை அளிக்கும் வேட்பாளா்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →