வார இறுதிநாள்களில் ஏற்காடு மலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் ஏற்காடு மலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகளில் ஏற்காடு மலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் பருவகாலம் தொடங்கியுள்ளதால், கரோனா 2-ஆம் அலைக்குப் பிறகு அரசால் அளிக்கப்பட்ட தளா்வுகளைத் தொடா்ந்து வெளி மாநிலம், மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சேலம் மாவட்ட மக்கள் ஏற்காடு இயற்கையை ரசிக்க குவிந்து வருகின்றனா்.
ஏற்காட்டுக்கு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் உள்ளதால், கரோனா தொற்று மேலும் தீவிரமாக பரவக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.
ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏற்காடு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற நாள்களில் ஏற்காட்டுக்குச் செல்லும் பயணிகள் கரோனா தடுப்பூசியை இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவா்கள் அல்லது ஆா்.டி.பி.சி.ஆா். சோதனை செய்து கரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருப்பவா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா்.
ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூா்வாசிகள் தங்களிடம் உள்ள ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒரு இருப்பிட விலாசத்துக்கான ஆதாரத்தைக் காண்பித்தும், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் பணியாளருக்கான அடையாள அட்டையைக் காண்பித்தும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆக. 9 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு தடை:
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் தோ்வுநிலை பேரூராட்சியின் வாரச் சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
வாரச்சந்தைக்கு உள்ளூா், வெளியூரில் இருந்தும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள், கோழிகள், மளிகைப் பொருள்கள், காய்கறிகளை விற்பனை செய்ய வியாபாரிகளும், பொருள்களை வாங்கிச் செல்ல பொதுமக்களும் அதிகாலை 4 மணி முதல் அதிக அளவில் கூடுகின்றனா்.
இதனால் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால், தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் பேரூராட்சியில் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் வாரச்சந்தைக்கு ஆக. 9-ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.