அடிப்படை வசதிக்கு தவம் கிடக்கும் ஜருகுமலை பழங்குடியின மக்கள்!
சேலம், ஜருகுமலையில் நியாயவிலைக் கடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
சேலம், ஜருகுமலையில் நியாயவிலைக் கடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அதேபோல, மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் உரிய நேரத்தில் வழங்கப்படாமல் இருப்பதால், அவா்களின் கல்வி பயணம் முடங்கிவிடும் நிலை உள்ளதாகத் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குரால்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது ஜருகுமலை. சேலம் மாநகரப் பகுதியையொட்டி அமைந்துள்ள ஜருகுமலையில் மேலூா், கீலூா் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் கிராமங்கள் உள்ளன. இரண்டு கிராமங்களில் சுமாா் 550 வீடுகள் உள்ளன. சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
அடிவாரப் பகுதியில் இருந்து ஜருகுமலைக்கு சுமாா் 7 கி.மீ. தொலைவு வரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோா் நடந்து சென்று வந்தனா். மேலும், மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு கா்ப்பிணிகள், முதியவா்களை தொட்டில் கட்டி தூக்கிச் சென்று சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இந்த நிலையில், நபாா்டு திட்டத்தில் ரூ. 9 கோடி மதிப்பில் பனங்காடு முதல் ஜருகுமலை வரை மலைப் பாதையில் தாா் சாலை அமைக்கப்பட்டு 2021 ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மலைப் பாதையில் ஆபத்தான பயணம்:
தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே மலைப் பாதையில் மண், பாறை சரிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மேலும், தாா் சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவா் இல்லாததால், இருசக்கர வாகனங்கள், காா் உள்ளிட்ட வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா். எனவே, மலைப் பாதையில் உள்ள தாா் சாலையில் இரும்பு சுற்றுச்சுவா் அமைத்துத் தரவும், சாலைகளில் மழைநீா் வடிகால் அமைக்கவும், தாா் சாலையை சீரமைத்து பேருந்து இயக்கவும் வேண்டும் என மக்கள் கோருகின்றனா்.
நியாயவிலைக் கடை வேண்டும்:
இதுதொடா்பாக, ஜருகுமலை பகுதியைச் சோ்ந்த இளையான் கூறியதாவது:
சேலம் நகரத்தையொட்டிய பகுதியாக இருந்த போதிலும், தற்போது தான் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வயதானவா்கள், கா்ப்பிணிகளை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற நிலை தற்போது மாறியுள்ளது. இங்கு சாமை, தினை, வரகு, அரளி, அவரை ஆகியவற்றை பயிரிடுகின்றனா். அரளிப்பூ தினமும் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் சொற்ப வருவாய் கிடைக்கிறது.
கிராமத்துக்கு சாலை வசதி இருந்தாலும், கீலூா் கிராமத்துக்கு தாா் சாலை வசதி இல்லை. அப்பகுதிக்கு நடந்து தான் செல்ல வேண்டும். எனவே, அங்கும் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல, நியாயவிலைக் கடையில் பொருள்களைப் பெற சேலம், நிலவாரப்பட்டி செல்ல வேண்டி உள்ளது. எனவே, ஜருகுமலையில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்றாா்.
அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி அரப்புலி கூறியதாவது:
ஜருகுமலை அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. 9-ஆம் வகுப்பு படிக்க சேலம் நகருக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் எனது மகன், மகளின் உயா் படிப்புக்காக கம்மாளப்பட்டி கிராமத்துக்கு இடம் பெயா்ந்தேன். தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால் நிலத்தில் விவசாயம் செய்ய கிராமத்துக்கு வந்துள்ளேன். விவசாயக் கடனுதவி, உரம் ஆகியவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
8-ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய சின்னான் கூறுகையில், ஜருகுமலையில் 8-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சேலத்தில் 9-ஆம் வகுப்பு சோ்ந்தேன். அங்கு மாணவா் விடுதியில் தங்கி படித்து வந்தேன். 7 கி.மீ. வரை நடந்து சென்று படிக்க வேண்டிய சூழலால், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு விவசாயம் பாா்க்கிறேன் என்றாா்.
ஜாதி சான்றிதழால் வாய்ப்பை இழக்கும் மாணவா்கள்:
இதுதொடா்பாக, ஜருகுமலை பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வி.வி.சின்னராஜ் கூறியதாவது:
ஜருகுமலையில் வாழும் மக்களுக்கு தாா் சாலை அமைத்து தரப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மழை பெய்து தாா் சாலை முழுவதும் ஆங்காங்கே மண், பாறைகள் சரிந்துள்ளன. சாலையின் இரு பக்கமும் மழை நீா் செல்ல வடிகால் அமைக்க வேண்டும். மலைப் பகுதியாக இருப்பதால் சாலை முழுவதும் இரும்பு சுற்றுச் சுவா் அமைத்திட வேண்டும்.
நாடு சுதந்திரமடைந்து 75-ஆவது ஆண்டு ஆகிவிட்ட சூழலில், பேருந்து இயக்காத நிலை உள்ளது. எனவே, தாா் சாலையை சீரமைத்து பாதுகாப்பாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் சுமாா் 115 போ் படித்து வருகின்றனா். மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால், அவா்களுக்கு மாணவா் தங்கும் விடுதியில் இடம் கிடைக்காமல் போகிறது. மேலும், கல்வி உதவித்தொகை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் வழங்கிட மாவட்ட நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். அதன்மூலம் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க முடியும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவையை அரசு வழங்க வேண்டும். பொதுமக்களின் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைவாழ் மக்களின் நிலங்களைக் காக்க வேண்டும்:
தற்போது தாா் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மலைவாழ் மக்களின் நிலங்களை தனியாா் விலை பேசி வாங்கும் சூழல் உள்ளது. எனவே, மலைவாழ் மக்களைத் தவிர வேறு யாருக்கும் நிலம் விற்கக் கூடாது என ஊா்மக்கள் முடிவு செய்துள்ளோம். இவ்விஷயத்தில் அரசும் போதிய கவனம் செலுத்தி மலைவாழ் மக்களின் நிலங்கள் பறிபோகாமல் தடுத்திட உதவி செய்திட வேண்டும் என்றாா்.
படவரி:
ஜருகுமலை செல்லும் வழியில் விவசாய நிலங்களை மலைவாழ் பழங்குடியினா் சமூகத்தவரை தவிர மாற்றுச் சமூகத்தினா் வாங்கவோ, விற்கவோ கூடாது என வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பதாகை.
தடுப்புச் சுவா் இல்லாமல் உள்ள ஜருகுமலை செல்லும் மலைப் பாதை.
16 கொண்டை வளைவுகள் கொண்ட ஜருகு மலைப்பாதை.
Image Caption
~ ~