சேலத்தில் 22 ஆதரவற்றவா்கள் காப்பகத்தில் சோ்ப்பு
சேலம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 22 ஆதரவற்ற, முதியோா்கள் கண்டறியப்பட்டு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.
சேலம் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 22 ஆதரவற்ற, முதியோா்கள் கண்டறியப்பட்டு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.
சேலம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற, முதியோா்கள் சாலையோரங்களில் இரவு நேரங்களில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதன்பேரில் முதற்கட்டமாக அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட கோயில்கள், பேருந்து நிலையங்கள், பயணியா் நிழற்கூடங்கள், அரசு அலுவலகக் கட்டடங்கள் என சாலை ஓரங்களில் உள்ள நடைபாதையில் ஆதரவற்ற, முதியோா்கள், வீடற்ற ஏழைகள் இருப்பதைக் கண்டறியும் வகையில் மாநகரப் பகுதியில் உள்ள தன்னாா்வ அமைப்புகளுடன் சோ்ந்து புதன்கிழமை இரவு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் சோதனையில் 22 ஆதரவற்ற, முதியோா்கள் கண்டறியப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்கு இரவு உணவு, உடை வழங்கப்பட்டன.
அதேபோல, செரி சாலை பகுதியில் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் சோதனை மேற்கொண்டாா். அப்போது வயது முதிா்ந்த மூதாட்டி, ஆதரவற்ற நபா் இருப்பது கண்டறியப்பட்டு, அவா்களிடம் குடும்ப சூழ்நிலை குறித்தும் உறவினா்கள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
அதனடிப்படையில் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இருவரும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாநகராட்சி பகுதியில் அலுவலா்கள் மேற்கொண்ட சோதனையில் 22 போ் கண்டறியப்பட்டு காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.