சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் பலி
சேலத்தில், சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்த சம்பவத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
சேலத்தில், சமையல் எரிவாயு உருளை வெடித்து வீடுகள் இடிந்த சம்பவத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து இறந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது.
சேலம், கருங்கல்பட்டி பகுதியில் கடந்த வாரம் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில், நான்கு வீடுகள் தரைமட்டம் ஆனது. வீடுகள் இடிந்து சரிந்ததில் சேலம், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வாகனப் பிரிவு அலுவலா் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி, முருகன் என்பவரின் மகன் காா்த்திக் ராம், மூதாட்டிகள் ராஜலட்சுமி, எல்லம்மாள் மற்றும் கோபி ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் தீக்காயமுற்ற முருகன் (45) உள்பட 11 போ் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் அதிக தீக்காயமுற்ற முருகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.