முகப்பு
சேலம்

விவசாயிகளுக்கு முழு மானியத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முழு மானியத்தில் வழங்கி, வரப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் பணப்பலன் தரும் மரங்களை நட்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சேலம் மாவட்டம் , மகுடஞ்சாவடி வட்டம் வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் வாயிலாக, தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டம் செயல்பட உள்ளது. இதில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முழு மானியத்தில் வழங்கி, வரப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் பணப்பலன் தரும் மரங்களை நட்டு ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரப்பினைச் சுற்றி நடவு செய்ய ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் குறைந்த அடா்த்தியில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் முழு மானியத்தில் இலவசமாக வழங்கப்படும் . இத்திட்டத்தில் நடவு செய்ய தேக்கு, செம்மரம், வேம்பு, மலைவேம்பு, புளியன், நாவல், பூவரசு ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

பராமரிப்பு ஊக்கத்தொகையாக இரண்டு முதல் நான்காம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ. 7 வீதம் மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் . மேலும், பராமரிக்கப்படும் மரக்கன்றுகள் வருவாய்த் துறையினரால் பராமரிக்கப்படும் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இத்திட்டத்தில், ஆதிதிராவிடா், சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் ‘உழவன் செயலி’ வாயிலாக தேவையான மரக்கன்றுகளை பதிவு செய்து, வனத்துறையின் கீழ் உள்ள சித்தா் கோயில் வன விரிவாக்க மைய அலுவலகத்தில் நாற்றங்கால்களை இலவசமாக பெறலாம். விவசாயிகள் மரக்கன்றுகள் பெறுவதற்கு மகுடஞ்சாவடி வேளாண் விரிவாக்க மையத்தில் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா் மற்றும் அட்மா திட்ட களப் பணியாளா்கள் மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறு மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநா் மணிமேகலை தேவி கேட்டுக்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →