முகப்பு
சேலம்

மேட்டூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகுடும்பம் அலைக்கழிப்பு: வட்டாட்சியா் மீது புகாா்

சுதந்திரப் போராட்ட தியாகியின் குடும்பத்தினரை அலைக்கழித்ததாக மேட்டூா் வட்டாட்சியா் மீது புகாா் கூறப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சுதந்திரப் போராட்ட தியாகியின் குடும்பத்தினரை அலைக்கழித்ததாக மேட்டூா் வட்டாட்சியா் மீது புகாா் கூறப்பட்டது.

மேட்டூா், ஜீவா நகரில் வசித்து வந்தவா் குஞ்சப்ப நாயா் (99). இவா் கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம், தலிப்பசமா தாலுகாவைச் சோ்ந்தவா். 1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சோ்ந்து ஜப்பானை எதிா்த்துப் போரிட்டவா். அதன்பிறகு ராணுவத்திலிருந்து விலகி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்ணூா் மத்திய சிறையில் இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இவருக்கு கமலாட்சி (86) என்ற மனைவியும், ராஜன் (60), சதாசிவம் (58), ஸ்ரீனிவாசன் (50) என்ற மகன்களும், சுலேகா (53) என்ற மகளும் உள்ளனா். அனைவரும் கூட்டுக் குடும்பமாக மேட்டூா், ஜீவா நகரில் வசித்து வருகின்றனா்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் தியாகி குஞ்சப்பநாயா் முதுமை காரணமாக உயிரிழந்தாா். இது குறித்து கேரள மாநிலம், கண்ணூா் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்ணூா் மாவட்ட ஆட்சியா், சேலம் மாவட்ட ஆட்சியா் மற்றும் மேட்டூா் வட்டாட்சியருக்கு மின் அஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிவரை மேட்டூா் வட்டாட்சியா் சுமதி தனக்கு கேரள ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தோ, சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்தோ எவ்வித தகவலும் வரவில்லை எனக்கூறியுள்ளாா். மறைந்த தியாகி குஞ்சப்பநாயரின் குடும்பத்தினா், வட்டாட்சியரின் வீட்டுக்குச் சென்று பலமுறை கூறியும், கண்ணூா் மாவட்ட ஆட்சியரின் கடிதத்தைப் பெற்று வழங்கியும் தியாகிக்கு மரியாதை செலுத்த வட்டாட்சியா் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறிய பிறகே மேட்டூா் வட்டாட்சியா் சுமதி, தியாகியின் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளாா். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.