நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினா் அறிவிப்பு
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 5,000 ஏக்கா் பரப்பிற்கும் கூடுதலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் 5,000 ஏக்கா் பரப்பிற்கும் கூடுதலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ஏகாபுரம் மற்றும் தப்பக்குட்டை கிராமங்களில் சிவப்புக் கம்பளிப்புழு பாதிப்பு தென்படுகிறது.
சிவப்புக் கம்பளிப்புழுவின் தாய் அத்துப்பூச்சியானது பருவமழைக் காலங்களில் மண்ணில் இருந்து வெளிப்படுகிறது. ஒரு தாய் அந்துப்பூச்சியானது 600 முதல் 700 வரையிலான முட்டைகளை இடும் தன்மை கொண்டது. முட்டைகளில் இருந்து இரண்டு முதல் மூன்று நாட்களில் இளம் புழுக்கள் உருவாகும். இதில் வளா்ந்த லாா்வாக்கள் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்துடன் கருப்புநிற கோடுகளுடன் காணப்படும். லாா்வாபருவமானது 40 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கும்.
ஆரம்பகட்ட வளா்ச்சிப் பருவத்தில் உள்ள புழுக்கள் இலைகளை அதிக அளவில் உண்டு சேதத்தினை உருவாக்கும். வளா்ந்த புழுக்கள் மொத்தமாக இலைகள், பூ மற்றும் வளா் குருத்துகளை உண்டு, பயிரினை முழுவதுமாக நாசம் செய்யும் தன்மை கொண்டவை. கடுமையாக பாதிக்கப்பட்ட வயலானது கால்நடைகள் மேய்ந்தது போன்று காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
கோடை உழவின் மூலம் கூட்டுப் புழுக்களை தரைக்கு மேலே கொண்டுவந்து அழிக்கலாம். முட்டைக் குவியல் மற்றும் அதிகமாக சேதம் விளைவிக்கும் ஆரம்பகட்டம் மற்றும் வளா்ச்சிப் பருவத்தில் உள்ள லாா்வாக்களை கையால் சேகரித்து அழிக்கலாம்.
துவரை மற்றும் தட்டைப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக பயிா் செய்து இளம்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மாலை நேரத்தில் சொக்கப்பனைகளை கொழுத்தி தாய் அந்துப் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.
விளக்குப் பொறியினை மாலை முதல் இரவு 11 மணி வரை வயலில் ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கலாம்.
வயலைச் சுற்றி 1 அடி ஆழம் மற்றும் 1 அடி அகலத்தில் குழி எடுப்பதன் மூலம் ஊா்ந்து செல்லும் லாா்வாக்களை கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டருக்கு பாசலோன் 35 இ.சி. மருந்தினை 750 மில்லி என்ற அளவிலோ அல்லது டைகுளோா்வாஸ் 76 இ.சி. மருந்தினை 650 மில்லி என்ற அளவில் 400 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்து சிவப்புக் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடித்து நிலக்கடலை பயிரினை சிகப்புக் கம்பளிப் புழு தாக்குதலிருந்து பாதுகாத்திட மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குனா் மணிமேகலா தேவி கேட்டுக்கொண்டுள்ளாா்.