கரோனாவால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்துக்கு கடனுதவி
கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினா் தேசிய பட்டியலினத்தோா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தில் ‘ஆஷா’ என்ற கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
கரோனா தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடா் குடும்பத்தினா் தேசிய பட்டியலினத்தோா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தில் ‘ஆஷா’ என்ற கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் வருவாய் ஈட்டும் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவா் கரோனாவால் உயிரிழந்திருப்பின் அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பட்டியலினத்தோா் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் நிறுவனத்தில் ஆஷா என்ற திரும்பச் செலுத்தும் கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பயனாளிகள் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய இறந்தவரின் வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.
இத் திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகை 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் நிறுவனத்தால் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இக்கடனுக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு செலுத்தலாம்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கொரோனா தொற்றினால்தான் இறந்துள்ளாா் என இறப்புச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆஷா திட்டத்தின் வழிமுறைகளில் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் இந்த கடனுக்கான விவரங்களைத் தெரிந்து கொள்ள மாவட்ட மேலாளா் தாட்கோ, சீலநாயக்கன்பட்டி, சேலம் அவா்களிடத்தில் நேரடியாகவோ அல்லது 0427-2280348 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.